காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி, சுய தொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு இல்லாதோர் நிவாரண உதவித் தொகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது 2 ஆண்டுப் பயிற்சியாகும். பயிற்சி வகுப்பில் சேர்பவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.300 வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர அடிப்படை கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் ஃபிட்டர் பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறதா?
மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடனில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
என்ன சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப் படுகிறது?
பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும்போது பொருட்களின் விலைப்பட்டியலை இணைத்து வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான நிவாரண உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறதா?
ஆம். மாதாந்திர உதவித் தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ளவர்களுக்கு ரூ.450 வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து ஓராண்டாகி இருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகையைப் பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நன்றி
நண்பன் தமிழ்