டெல்லி பஸ்களில் பெண்கள் பாதுகாப்புக்கு அரசு புதிய வியூகம்
டெல்லி பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், வல்லுறவுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் 'கூட்டு அதிரடிப் படை' என்ற புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது அம்மாநில அரசு.
இது குறித்து டெல்லி அதிகாரி ஒருவர் கூறும்போது, "டெல்லியில் பெண் பயணிகளுக்கு உள்ள ஆபத்தை அரசு புரிந்துகொண்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பேருந்தில் இரவு நேர பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதற்கு வழி ஏற்படுத்த தன்னார்வலர்களிடமிருந்து யோசனைகள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. அதில் 'கூட்டு அதிரடிப் படை' என்ற திட்டம் இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தலாம் என்று யூகிக்கப்படுகிறது.
முதல்வர் கேஜ்ரிவால் இந்தத் திட்டத்துக்காக பணியாற்றக் கூடிய பாதுகாவலர்களை நியமிக்க மனிதவள ஆற்றல் நிபுணர்களின் உதவியைக் கோரியுள்ளார். அவர்கள் அளிக்கும் நபர்களைக் கொண்டு பயணங்களின் போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முன்மொழிவை சிவில் பாதுகாப்புத் துறை அரசிடம் விரைவில் வழங்க உள்ளது.
டெல்லி ஊர்காவல்படை தற்போது வருவாய்த் துறைக்கு கீழ் இயங்குவதால், அரசு இந்த திட்டக் குறிப்பை அந்த துறைக்கு அனுப்பியுள்ளது. ஊர்காவல் படையின் வசம் சுமார் 17,000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுய பாதுகாப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதைத் தவிர ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு ஊர்காவல்படையை வருவாய்த் துறையின் கீழ் கொண்டு வந்து உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியாக மக்களிடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more @ http://www.nanbantamil.blogspot.com
பெண்கள், கூட்டு அதிரடிப் படை, டெல்லி, Delhi, women safety