Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 31 May 2014

பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா?




பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா? 
என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதறவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேசமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவி களைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம்.
தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் 'ரொமான்டிக் லுக்' விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப் படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே, ஒரு நூறை நெருங்கும். 'யார்', 'மை டியர் லிஸா', 'ஜென்மநட்சத்திரம்', '13-ம் நம்பர் வீடு' 'வா அருகில் வா' போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், 'யாவரும் நலம்', 'பீட்சா' போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக 'யாமிருக்க பயமே' என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே நம்பியிருக்க மாட்டார்!
என்றாலும், அறிவியல்பூர்வமாக எந்த அடிப்படையும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிய கதைகள், திரைப்படங்கள் மக்களைக் கவர்வது ஏன்? பேயின் இருப்புபற்றிய சந்தேகம் இருந்தாலும் மனதில் கிலியுடன், பாதுகாப்பான வளையத்துக்குள் அமர்ந்து பேய்ப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களால் அந்த பய உணர்வை ரசிக்க முடிகிறது என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தான் எழுதிய 'காஞ்சனை' கதைகுறித்த கேள்விக்கு "பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறதே!" என்று புதுமைப்பித்தன் பதிலளித்திருக்கிறார். "நம் நினைவுகள்தான் பேய்கள்" என்று மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கதைகளை அடிப்படையாக வைத்துப் பல 'திகில்' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆதி மனிதர்களாகக் குகைகளில் நாம் வாழ்ந்துவந்த காலகட்டத்தில்தான் நம்மிடையே பேய் பற்றிய பயம் வந்தது. ஒருவேளை, பேய் நம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை தோன்றுவதற்கும் காரணமோ? விவசாயம், அறிவியல், கல்வி போன்ற விஷயங்கள் அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில், புதிரான சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஏதேனும் ஒரு 'சக்தி'தான் காரணம் என்று குகை மனிதர்கள் அஞ்சினர். உதாரணமாக, குகைக்கு வெளியே கற்கள் உருண்டோடினால்கூட, கண்ணுக்குப் புலப்படாத சக்திதான் அதற்குக் காரணம் என்று குகை மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்த பயம் நம் மனதின் எங்கோ ஓர் மூலையில் படிந்துவந்திருக்கிறது. அது இன்றும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.
கல்வியும் அனுபவமும் இந்த நம்பிக்கைகள் மீதான கேள்வியை நம்முள் எழுப்பியுள்ளதால், இந்த விஷயங்களைக் கதைகளில் மட்டும் ரசிக்கும் அளவுக்கு நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது.
காட்டில் அமர்ந்து தவம் புரிந்த இரவுகளில், உடனடியாக விளக்க முடியாத ஒலிகள், அசைவுகளால் அச்சமுற்றதாக புத்தரே குறிப்பிடுகிறார். அறிவுபூர்வமாக அவற்றை அணுகிய புத்தர், தன் பயத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உணர்ந்தார்.
எனினும், கலைகளில் அறிவையும் தாண்டி கற்பனைகளே அதிகப் பங்கை வகிக்கின்றன. எனவே, பேய், டிராகுலா, ஓநாய் மனிதன் உள்ளிட்ட நிரூபணமாகாத விஷயங்கள்குறித்த கலைப்படைப்புகள் இன்றும் வெற்றிபெறுகின்றன. 'யாமிருக்க பயமே' அவற்றில் ஒன்று.
--
Thanks And Regards


ஒரு நிமிடக் கதை - சிரிப்பொலி



ரஹீம் கஸாலி - சிரிப்பொலி


நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் 'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்' என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
"என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல"
"மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்"
"அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?"
"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே"
"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல...."
"இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்."
"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்."
"அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்" என்றான் அவன் மகன்.
"எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."
போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.
http://my.cbox.ws/FriendsTamil
http://NanbanTamil.blogspot.com
http://fb.com/FriendsTamilNanban

கோச்சடையானும் ஏளனப் பார்வையும்



கோச்சடையான் வெளியான முதல் நாள். | படம்: வி.கணேசன்

ரஜினி படம் பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. முதற் காரணம்...
ரஜினி.
"ஒரு பொம்மை படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்குச் செல்ல வேண்டாம். ட்ரைலர் பார்க்கையில்- கார்ட்டூன் நெட்வொர்க்கில் போடப்பட்ட பாண்டவாஸ் படம்கூட இதைவிட நன்றாக அமைந்திருந்ததே!"
"ஒரு குறும்படம் கூட இயக்காமல் முதல் படத்துலையே ரியல் டைம் மோஷன் கேப்சர் அணுகுமுறையை யாராவது கையாளுவார்களா?"
"இப்படிப்பட்ட விஷப் பரீச்சைக்கு சூப்பர் ஸ்டார் இரையாகப் போகிறார்... இதை வேறு தியேட்டரில் பார்த்துத்தான் உணர வேண்டுமா?"
"ஹாலிவுட்டில் அவதார், 3௦௦ போன்ற படங்கள் பார்த்திருக்கிறோமே... இதைத் தாண்டியுமா கோச்சடையான் ஈர்க்கப் போகிறது?"
இப்படிப் பல கேள்விகள் கோச்சடையான் பார்க்க வேண்டாம் என்று மனதில் அஸ்திவாரம் போட்டது.
கடைசியில் படம் வெளியாகிவிட்டது. முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் என்று தோன்றுகையில் கேள்விகளால் மனதில் தொடுத்து அமைக்கப்பட்ட வேலி, ரஜினி என்ற காந்தச் சக்தியால் சுக்கு நூறாக உடைந்து திரையரங்கின் வாசலுக்கு இழுத்துச் சென்றது.
திரையரங்கிற்கு நேரடியாக சென்று கடைசி நிமிடத்தில் எப்படியாவது அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி பார்க்க நேர்ந்தது.
இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்?
நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு 'உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்' என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது.
நண்பன் ஆதியின் படையில் தளபதியாக கைகோக்கிறார் ரஜினி. அப்போ இது மீண்டும் ஒரு தளபதியா என்று யோசித்தால் அந்த எண்ணத்திற்கு அப்படியே ஒரு முட்டுக்கட்டை போட்டு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை டேக் டைவர்ஷன் எடுக்கிறது.
கோச்சடையான் வரலாறு சார்ந்த படம்தான். ஆமாம். நம் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பார்த்து வரும் அதே ரத்தம், அதே பழி, அதே வேட்டை. குடியிருந்த கோயில் தொடங்கி சிலம்பாட்டம் வரை பார்த்து பழக்கப்பட்ட அதே பழிவாங்கும் படம் தான் கோச்சடையானும். இருப்பினும், அப்படங்களுடன் இக்கதையை சரித்திரத்துடன் இணைத்ததிலும் அதற்கு ரஜினியை புகுத்தியதிலும், ஆனிமேஷனில் டெலிவர் செய்த விதத்திலும் தான் கோச்சடையான் வேறுபடுகிறது.
முதல் காட்சியில் ரஜினி அறிமுகம் செய்யப்படும்போது எத்தனை உத்வேகம் இருக்கிறதோ அதே உத்வேகம் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. மீண்டும் கூறினால் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை. முற்றிலுமாக ரஜினியின் திரை ஆளுமையை அறிந்து கொண்டு, ரசிகர்களையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வண்ணம் திரைக்கதை அமைத்ததில் சபாஷ் போடா வைக்கிறார் இவர்.
குதிரைப் படைகளில் புகுத்தப்பட்ட சக்கரம் போலத்தான் ரஹ்மானின் இசை இப்படத் திரைக்கதைக்கு. குதிரை எப்படி வளைகிறதோ அதற்கு ஏற்றார் போல் அத்தனை வளைவுகள் பயணத்திற்க்கேற்றார் போல் புதிய புதிய பாதைகள் அமைத்தது சுவாரசியத்தில் அமர வைக்கிறது. படத்தில் குறிப்பிடப்படாத மற்றொரு கதையாசிரியர், வசனகர்த்தா வைரமுத்து. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் பாடல்கள் படத்தின் ஜீவனாக இப்படத்தில் தோன்றியது.
நாசர்: ரானா இனி உனக்கு வாய்ப்புகள் அமையாது
ரஜினி: என் அன்பு மன்னா, வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாசர்: பகல் கனவு காணாதே
ரஜினி: இனி உறங்கினால் தானே கனவு கண்டிட?
இப்படி இரண்டாம் பாதியில் எதுகை மோனை குன்றாது ரஜினி பேசும் வசனங்கள் மயிர் கூச்சல் பெற வைக்கிறது.
ரஜினியின் நேசியாக 'கோச்சடையான்' திருப்தி தந்திருக்கிறது என்றால் தீபிகா படுகோனை விழுந்து விழுந்து ரசித்த கலாரசிகனுக்கு கோச்சடையான் கொஞ்சம் இல்லை... பலத்த ஏமாற்றத்தை தான் தருகிறது. ஜாக்கி ஷராஃப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் இவர்களை நன்கு சித்தரித்தவர்கள், நாகேஷை மீட்டுக் கொணர்ந்து வந்தவர்கள் தீபிகா படுகோனையும் நன்கு காட்டியிருக்கலாம். பக்ஷே அது மட்டும் பெரிய ஏமாற்றம் சாரே.
கதாப்பாத்திரங்களின் உடையலங்காரம், வாளின் ஓசையேது மூங்கிலின் ஓசையேது என்று ஒவ்வொரு பொருளுக்குரிய சப்தத்தை துள்ளியமாக பதிவு செய்த ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பு, நிழற்படங்களின் வண்ணங்கள் படத்தின் இன்னபிற சிறப்பு அம்சங்கள். அக்மார்க் ரஜினி படம் பார்க்கின்ற எபஃக்ட்டினை வசனங்கள் அளித்துள்ளது.
ஹாலிவுட் ஆனிமேஷன் படங்கங்களில் எல்லாம் கதாப்பாத்திரத்தின் விழிகளை எல்லாம் எப்படி தத்ரூபகமாக சித்தரித்து இருப்பார்கள் இங்கே எல்லாரின் விழிகளும் ஒரே போலத் தானே இருக்கிறது, படம் சில இடங்களில் இருளோ எனத் தோன்றியது, கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் இப்படி எத்தனையோ கேள்விகள் தொடுத்து ஏளனம் செய்யலாம். ஆனால் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.டி.ராஜசேகர், ரசூல் பூக்குட்டி, சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராஃப் இவர்களை வைத்துக் கொண்டு இதே கதையுடன் ஒரு கமர்சியல் படம் இயக்கி இருந்தால் பாலிவுட் ஓவர்சீஸ் வரை விற்று ஏகத்துக்கு லாபம் பார்த்திருக்கலாம். இதற்கு மாறாக முதற் படத்திலேயே பல ஜாம்பவான்களை வைத்து இந்தியன் சினிமாவில் புதுமையாக ஒரு பிரம்மாண்ட மோஷன் பிக்சர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தைரியம் நம்முள் எத்தனை பேருக்கு வரும்.
இன்று திருவிளையாடல் தருமியை போன்ற ஒப்பனையுடன் நாகேஷை மீட்டுக் கொணர்ந்ததை பார்க்கும் போது அப்படியே நெகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. இனி பிராட்பிட்டினை ஹாலிவுட்டிலிருந்து இறக்கி ஆல்தோட்ட பூபதி பாட்டிற்கு குத்தாட்டம் போட வைக்கலாம், துப்பாக்கி பார்ட்-2விற்கு லியோநார்டோ டிகாப்ரியோவை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ன கெட்டு விடப் போகிறது யார் கேட்கப் போகிறார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையும் இணைத்து தளபதி போன்ற ஒரு கதையை அமைத்து நடிக்கச் செய்யலாம். இனி காலத்தால் அழியாத கலைஞர்களை நமது சந்ததியினரையும் அறிய வைக்கலாம். இந்த எண்ணங்கள் இந்தியக் கலைஞர் பலருள் தோன்றிட கோச்சடையான் வித்திட்டுள்ளது.
நம் ஊரில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனிமேஷன் படம் என்ற பிம்பத்தையும் கோச்சடையான் சிதைத்துள்ளது. ரஜினி தனது ஸ்டைலுடன் முறையாக பரதம் பயின்று ஆடினால் இத்தனை நன்றாக இருக்குமா என்ற யோசனையும் கடந்து அற்புதமாக அமைந்துள்ளது கோச்சடையான் ஆடும் சிவதாண்டவம்.
சௌந்தர்யா தனது தந்தையை எப்படிப்பட்ட சிம்ம சொப்பனமாக கண்டுள்ளார் எப்படி எல்லாம் பார்க்க நினைக்கிறார் என்பதை ரஜினி, ஷோபனா இணையும் ஆடல் காட்சி பிரதிபலித்தது. இயக்குனரை கடந்து ஒரு மகளால்தான் தான் விரும்பும் அப்பாவை இப்படி பிரதிபலிக்க முடியும்.
'வாழ்வை வென்றாய் வையம் சென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா' என்ற வைரனின் வரிகளுக்கு ஏற்ப என்றும் அழியாத சொப்பனமாய் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் அவதரித்துள்ளார்.
ஏளனப் பார்வையுடன்தான் திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் ஏளனப்பட்டதென்னவோ என் பார்வைதான். கோச்சடையான்... ஆனிமேஷனில் வரலாறு கலந்த மசாலா ஷம்போ மஹாதேவ்!
- Thanks and Regards

கஷ்டமான கேள்விகளுக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா பதில்கள்


(படம்: ஆர். ஜெய்குமார்)
(படம்: ஆர். ஜெய்குமார்)
உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?
பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ சாத். ஒரு பிரபுவாக சுகபோகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர் தன்னையும், தன் வாழ்க்கையையும் பரிசோதனைக் களமாக்கி ஏராளமான பக்கங்களை எழுதினார்.
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
தற்பெருமை அடித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதை மிகவும் விரும்பி ஆர்ப்பாட்டமாகவும் ஆரவாரமாகவும் செய்வது என்னிடம் பிடிக்காத குணம்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
தற்போதைக்கு அராத்து.
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
கால எந்திரத்தில் பயணித்து என் கடந்த பிறவியின் வாழ்க்கையைப் பார்ப்பது. அது சாத்தியம்தான் என்கிறார்கள். கையில் ஒரு பைசா இல்லாமல் ஃபிரான்ஸில் நண்பர்களின் உதவியிலேயே சில மாதங்கள் பயணம் செய்தது. பெரூவைச் சேர்ந்த எழுத்தாளர் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) நாவல்களில் வரும் அத்தனை தென்னமெரிக்க ஊர்களையும் பார்க்க விரும்பும் திட்டம் இருக்கிறது.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
அரசாங்க இலாகாக்களில் 20 ஆண்டுகள் வேலை செய்தது. இன்னமும் அந்த மோசமான அனுபவங்கள் என் கனவுகளிலும் துரத்திக் கொண்டிருக்கின்றன.
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
என் இனிய நண்பன் தருண் தேஜ்பால்.
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
சமீபத்தில் ஒரு நாள் என் செல்ல நாய்க்குட்டி பப்புவோடு வாக்கிங் போனேன். நடு ரோட்டில் அது மலம் போய்விட்டது. அந்த வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர் என்னைப் பார்த்து "வயசாயிடுச்சே, மூளை இருக்கா?" என்று கேட்டார். நான் பதில் ஏதும் சொல்லாமல் கையோடு எடுத்துச் சென்றிருந்த காகிதத்தில் அந்த மலத்தை எடுத்து கவரில் போட்டு அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த இளைஞரிடம் சென்று, "எனக்கு மனிதர்கள் தெய்வத்தைப் போல. அதேபோல் நீங்களும் என் தெய்வம். இந்தக் காலை நேரத்தில் உங்களைக் கோபப்படுத்தியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதுதான் இப்போதைய என் மனநிலை.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஸ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.
ஒரு வெள்ளரி பழுத்த பிறகு தானாகவே அதன் கொடியிலிருந்து இற்று விழுவதுபோல் என் மரணம் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். சமீபத்திய உதாரணம், குஷ்வந்த் சிங்.
தொகுப்பு: ஷங்கர்

-- 
Thanks And Regards

Saturday, 3 May 2014

தேசிய விருது வென்ற அர்த்தமுள்ள சினிமா

ஷிப் ஆஃப் தீசஸ்

ஷிப் ஆஃப் தீசஸ்

61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ள 'ஷிப் ஆஃப் தீசஸ்' படம் குறித்த பார்வை...
யாரோ ஒருவர் திரையில் ஆடுகிறார், காதல் செய்கிறார், சண்டை போடுகிறார், பன்ச் வசனம் பேசுகிறார், நாயகியை மணம் முடிக்கிறார். இதைப் பார்த்து நான் அடைந்த பலன் என்ன? எதற்காக என் நேரத்தை, பணத்தை விரயம் செய்கிறேன்? இந்த படம் பார்த்து நான் கொண்டு செல்லப் போவது என்ன?
இந்தக் கேள்விகள் உங்களுள்ளே எப்போதாவது எழுவதுண்டா?
பொருளற்ற மசாலாக்கள் போர் அடித்துவிட்டதா? அர்த்தமுள்ள சினிமாவினை தேடி வருகிறீர்களா? கருத்திற்கு விதை போடும் ஒரு சினிமா - நல்ல சினிமா. அதுவே உன்னத சினிமா. இந்திய சினிமாவில் வர்த்தகத்திற்கு வளைந்து கொடுக்காத உன்னத சினிமாக்களை தேடி வருகிறீரா? முதலில் கையைக் கொடுங்க பாஸ், உங்களை போன்றோரைத் தான் தேடி வருகிறேன்.
கிரேக்க மன்னன் தீசஸ் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து உருவாகிய ஒரு சிந்தனை தான் "ஷிப் ஆப் தீசஸ்".
ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது. இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த அக்கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது. இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?
இந்த சிந்தனையில் கப்பலிற்கு பதிலாக மனிதனை வைத்து உயிர், வாழ்க்கை, கொள்கை, சமயோஜிதம் இப்படி பல தரப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் 'ஷிப் ஆப் தீசஸ்'.
இக்கதையில் மூன்று நாயகர்கள். மூன்று பேருக்கும் வாழ்க்கை பற்றிய வேறுபட்ட பார்வை, ஒவ்வொருவருக்கும் தனி கொள்கை. நாம் வாழ்க்கையில் கடந்த, கடக்கவிருக்கும் யாராக வேண்டுமானாலும் இம்மூவர் இருக்கலாம்.
ஒருவர் ஓர் இடத்தில் இருக்கும் சப்தத்தை வைத்து அவ்விடத்திலிருக்கும் சூழலை மனதில் பதிவு செய்து அதை காட்சிப்படுத்தும் பார்வையற்ற பெண் போட்டோக்ராஃபர். பார்வையல்லாதவர் தான் இவர் என்றாலும் இவர் பார்க்கின்ற உலகத்தை, இவரது பார்வையை இவர் எடுத்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும். தன் கணவனே பாராட்டினாலும் தான் எண்ணிய வெளியீடு புகைப்படத்தில் கிட்டாத பட்சத்தில் அதை கிழித்தெறியவும் தயங்காத குணம் இவருக்கு. பார்வையற்ற இவருக்கு ஒரு மனிதனின் தானத்தால் பார்வை வருகிறது.
மற்றொருவர் ஒரு பிட்சு. தன்னைப் போன்று பிற உயிர்க்கும் இவ்வுலகில் வாழ அருகதை உண்டு என நினைக்கும் சிந்தனை இவருக்கு. மாத்திரை, மருந்து உருவாக்குவதில் எண்ணற்ற விலங்குகள் இரையாக்கப்படுவதையும், வதைபடுவதையும் எதிர்த்துப் போராடுகிறார் இவர்.
லிவர் சிரோசிஸ் நோயினால் இந்த பிட்சுவின் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப் படுகிறது. மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மருத்துவர் எச்சரித்தும் தன் கொள்கையிளிருந்து வழுவாது நிற்கிறார். வலி உயிரை வாட்டுகிறது. தேகம் கரைகிறது, இருந்தும் எண்ணத்தில் சிதைவில்லை.
தான் கொண்ட கருத்திற்காக உலகத்தை சிதைக்கும் தீவிரவாதிக்கும், தன்னையே சிதைத்துக் கொள்ளும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்கிறார். உயிர் வாழத்தான் கொள்கை உயிரே போகையில் கொள்கை கொண்டும் என்ன பயன்? உன் கொள்கை உலகத்தில் என்ன வித்தியாசம் உருவாக்கும்? என்று அவர் கேள்வி கேட்கிறார். 'எதுவும் இல்லாததற்கு ஏதோ இருக்கிறது என்ற வித்தியாசம் உண்டாக்குமே அது போதும்' என்று பிட்சு பதிலளிக்கிறார். நாட்கள் நகர நகர, உடல் நலம் மோசமடைய கடைசியில் கொள்கையும் சிதைகிறது மருந்து எடுக்க ஒப்புக் கொள்கிறார்.
மூன்றாவது நபர் முதல் இருவரிலிருந்து வேறுபட்டு நிற்பவர். இவருக்கென்று கொள்கையும் கிடையாது வாழ்க்கை பற்றிய பார்வையும் கிடையாது. ஸ்டாக் ப்ரோக்கராக இருக்கும் இவ்விளைஞன் தன் பாட்டியை பார்த்துக் கொள்ள அவளுடன் மருத்துவமனையில் தங்குகிறான். சமூக அக்கறை கொண்ட இவர் பாட்டி, உயிர்கள் பற்றிய பார்வையை, சமுதாயம் மீது செலுத்த வேண்டிய அக்கறையை புகட்டுகிறார்.
நாளிதழில் கிட்னியை அப்பாவிகளிடம் திருடி பிறருக்கு அளித்த மருத்துவர் கைது என்று செய்தி வெளிவருகிறது.
சமீபத்தில் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்ட செய்தி இவருள் கேள்வியை எழுப்புகின்றது. தன் உடம்பில் புகுத்தப்பட்ட கிட்னி வேறொரு அப்பாவியை ஏமாற்றி கிடைத்ததோ? என்ற ஐயம் இவருக்கு பிறக்கிறது. ஒரு தேடல் இவர் மனதினுள் தொடங்குகிறது. தனக்கு தானம் செய்த மனிதர் என நினைத்து ஒருவரை காணச் செல்கிறார்.
'வேண்டாம், அங்க போகாதே ஒரு வேளை அவன் உனக்கு புகுத்தப்பட்ட கிட்னியை திரும்பித்தர கூறினால் என்ன செய்வாய்?' என்று நண்பர் கேட்க 'கொடுத்திடுவேன்' என்று பதிலளிக்கிறார். பிறகு நண்பர்களால் தனக்கு புகுத்தப்பட்டது இறந்த ஒரு மனிதரிடமிருந்து எடுக்கப்பட்டதென்று அறிந்து கொள்கிறார். இருந்தும் அந்த அப்பாவி மனிதனுக்கு உதவி செய்ய முன்வருகிறார்.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அம்மனிதர் மருத்துவரால் ஏமாற்றப்பட்டு இரு சிறுநீரகத்தையும் இழந்து நிற்கிறார். இவருக்காக உதவும் பயணத்தில் அவ்விளைஞன் மனதில் சமூக அக்கறை பிறக்கிறது.
கடைசியில் இம்மூவருக்கும் ஓர் இடத்திற்கு வரக்கூறி அழைப்பிதழ் வருகிறது, செல்லும் இடத்தில் ஒரு காணொளி திரையிடப்படுகிறது. அதில் ஒரு மனிதனின் ஆசைகள், கனவுகள் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கும் கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மால் உணர முடிகிறது. திரையில் தோன்றிய அவ்விளைஞனின் உடல் பாகங்களே இம்மூவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காட்சிக்குப் பிறகு 'ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?' என்ற சிந்தனை வைக்கப்பட்டு படம் முடிகிறது.
அமைதியான சூழலில் பார்த்தால் இப்படத்தில் அமைந்துள்ள அற்புதமான ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உயிரூட்டும் நடிப்பு, சிந்தனை மிக்க வசனங்கள், நுட்பமான ஒலியமைப்பு கண்டிப்பாக உங்களை நிஜ உலகத்திற்கு அழைத்துச் சென்று அதை பார்க்கின்ற ஆரோக்கிய பார்வையினையும் விதைக்கும்.
சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் படங்களுக்கிடையே நல்ல சிந்தனைக்கு அசை போடும் 'ஷிப் ஆஃப் தீசஸ்' ஓர் ஆத்மார்த்த அனுபவம்.

'செல்'லால் கேட்காமல் செயலால் கேளுங்கள்!

கோப்புப் படம்

சமீபத்தில் ஒரு முக்கிய வேலையில் இருந்தேன். செல்பேசியில் ஓர் அழைப்பு, 'எனக்கு வாக்களியுங்கள்' என்று. என் கவனத்தைச் சிதறடித்ததால், வேளைகெட்ட நேரத்தில் இது எல்லாம் தேவையா என்ற தார்மீகக் கோபம் எழுகிறது.
ஒரு வாடிக்கையாளர் எண் நிச்சயம் அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்போவதில்லை. (அவர்களுக்கு மக்கள் யார் என்று எப்போதும் தெரியாது). இதை வாடிக்கையாளர் பயன்படுத்தும் நிறுவனங்கள் கொடுத்திருக்கலாம். வாடிக்கையாளரிடம் அனுமதி பெறாமல், அவருடைய அந்தரங்க எண்ணை, அரசியல் நிறுவனங்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் எப்படி தருகிறது? எந்தத் தார்மீகம் இதில் பின்பற்றப்படுகிறது?
ஒரு வாக்காளருக்கு, இந்த அழைப்பு எப்படியான மனநிலையை உருவாக்கும் என்பதை ஏன் கட்சிகள், தொலைபேசி நிறுவனங்கள் நினைப்பதில்லை? இதை எப்படி தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தப்போகிறது? இந்தத் தார்மீகத்தைத் தொலைபேசி நிறுவனங்கள் எப்படி காப்பாற்றப்போகின்றன?
நாய்கள் சாலையில் குரைப்பதுபோல், அரசியல் கட்சிகள் பொதுச்சாலையில் கத்துவதை எந்தக் குடிமகனும் மறுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடிக்கையாளரை அழைத்து வாக்குக் கேட்பது எவ்வளவு அநாகரிகம். ஒருவரின் அனுமதி இல்லாமல், அவருடைய எண்ணைக் கண்டறிந்து வாக்குக் கேட்பது என்பது, ஒருவரின் வீட்டிற்குள், அனுமதி இல்லாமல் உள்ளே செல்வதற்குச் சமம்.
தொலைபேசியில் வாக்குக் கேட்கும் உத்தி, புதிய தொழில்நுட்ப உத்தி. இந்த உத்தி பாராட்டத்தக்கதுதான் என்றாலும், வாக்காளர் எதிர்க்கட்சி என்றால், உங்களின் அழைப்பால், அவர் உங்களை மனதில் எவ்வளவு திட்டுவார் என்பதை ஊகித்துப்பாருங்கள் தலைவர்களே! தலைவிகளே!
ஒருவேளை எந்தக் கட்சியையும் விரும்பாதவர் எனில், அவர் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள் கட்சிகளே!
வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர் செல்பேசிக்கு அழைப்பு விடுத்து, ஓட்டு கேட்கும் இந்த மகா தந்திர உத்தியைக் கட்சிகள் நிறுத்திக்கொள்ள இயலும் என்றால் நல்லது. தேர்தல் ஆணையம் இந்த உத்தியைத் தயவுசெய்து தடை செய்யவேண்டும். வாடிக்கையாளர் எண்ணைத் தரும் நபர்கள், நிறுவனங்கள்மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது.
மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் செவி சாய்க்காத எந்த ஒரு கட்சிகளுக்கும், வாக்காளரின் செவி எப்போதும் செவிசாய்க்காது என்பதைக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, வாடிக்கையாளரின் வாக்காளரின் மனோநிலையைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தியைக் கட்சிகள் கைவிடுவதுதான் நல்லது. வாடிக்கையாளரின் எண் அந்தரங்கமானது. அது நண்பர்களுக்கானது, உறவினர்களுக்கானது, உடன் பணிபுரிபவர்களுக்கானது. கட்சிகளுக்கானது அல்ல. இதைக் கடந்து சில தார்மீகக் கேள்விகள் எழுகின்றன
1. வாடிக்கையாளரின் எண்ணை, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள எப்படி பயன்படுத்தலாம்?
2. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், எங்கிருந்து கட்சிகள் எண்ணைப் பெற்றன?
3. வாடிக்கையாளர் எண்ணைக் கொடுத்தவர் யார்? அல்லது எந்த நிறுவனம்?
4. வாடிக்கையாளர் எண்ணைத் தொலைபேசி நிறுவனங்கள் கொடுத்திருந்தால், அவை வாடிக்கையாளரிடம் முன் அனுமதி பெற்றனவா?
5. ஒருவரின் முன் அனுமதி இல்லாமல், ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துக் கேட்டும் இந்த உத்தியைத் தேர்தல் ஆணையம் எப்படி தடைசெய்யப்போகிறது?
கட்சிகளே! தயவு செய்து எங்களை அழைத்து வெறுப்பேற்றாதீர்கள். நீங்கள் உத்தமர் என்றால், உங்களுக்கு வாக்கு தானாக விழும்!
நீங்கள் 'செல்'லால் கேட்பதால் மயங்கி வாக்களித்திட மாட்டோம். ஆக்கப்பூர்வ செயலால் கேட்கப் பழகுங்கள்.


நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்

கோப்புப் படம்

ஆயிரம் பேர் சென்டம் - மகிழ்ச்சியில் கல்வித்துறை'
'தமிழ், கணிதம், வேதியியல் பாடத்திலும் மாணவர்கள் அதிக சென்டம் எடுத்திருக்கிறார்கள்.'
சில நாட்களுக்கு முன் இந்த இரண்டு செய்திகளை வாசித்தபின்தான் எனக்கு நமட்டுச் சிரிப்பு வந்தது.
தமிழ் விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை. அதெப்படி? மாணவர்கள் சரியாக எழுதியிருந்ததால்தானே நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் வரலாம். ஆனால் திரும்பவும் சொல்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை." எப்படி?
அறிவியல் மற்றும் கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுப்பது சாதனை அல்ல. இயல்பான ஒன்று. கணிதத்தைப் பொறுத்தவரை, படிகள் மற்றும் விடை சரியெனில் நூறு கிடைத்துவிடும். அறிவியலில் எழுத்துப்பிழை பார்ப்பதில்லை. ஆக்சிஸன் என்றாலும் அக்சிசன் என்றாலும் ஒன்றே. அதாவது உச்சரிப்பு மட்டுமே தேவைப்படலாம். அறிவியல் என்பது மொழி அல்ல. அது ஒரு சிந்தனைக்குட்பட்ட பாடம் என்பதால், மொழிப் பிரச்னை அதில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், தமிழ் அப்படியில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே.
தன் பிள்ளை / மாணவர் தமிழில் யாரும் எடுக்க முடியாத நூறு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் / பெற்றோர் சந்தோஷப்படலாம். உண்மையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லை. நாம் வருத்தப்படவேண்டும். ஏன்?
காலங்காலமாக ஏதாவது ஒரு தனியார் குறிப்பேட்டைத்தான் (நோட்ஸ்) தமிழ் பண்டிட்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். (பரிந்துரைக்காத ஐயாக்களுக்கு, அம்மாக்களுக்கு வாழ்த்துகள்) அவர்கள் பரிந்துரைத்த குறிப்பேட்டைப் பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். பெற்றோர் வாங்கித் தந்த குறிப்பேட்டை டப்பா அடித்து, மாணவர்கள் கக்கி, முழு மதிப்பெண் பெற்று எல்லாரிடமும் வாழ்த்து பெறுகிறார்கள். கிளிப்பிள்ளைப் போல் அட்சர அட்சரமாகத் தவறில்லாமல் எழுதிவிடுகிறார்கள் புத்திசாலிகள். இதற்கு நாம் எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்?
இப்போது பத்தாம் வகுப்புத் தமிழ் விடைத்தாள் திருத்திக்கொண்டிருக்கிறேன். சில விடைத்தாள்கள் நூறு அருகில நெருங்கிவிடும்போது, சக ஆசிரியர்கள் பயந்து என்னிடம் பார்வைக்குத் தருவார்கள். மொழி என்னும் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, விடைகளில் உள்ள சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்பிழை தெரிந்துவிடும். சுழித்துவிடுவேன். தேர்வர் நூறிலிருந்து சருக்கி 90 அருகில் வந்திடுவார். பிறகென்ன நூற்றுக்கு நூறு கனவு அம்போதான். எனவே பெரும்பாலான தமிழ் பண்டிட்கள் தவற விடுவது, இந்தப் பிழைகளைக் கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுகிறார்கள. (நாங்கள் அப்படி இல்லை என்கிற தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்). திருத்தப்பட்ட விடைத்தாள்கள் விடைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே இரண்டு விஷயங்கள் தென்படுகின்றன. ஒன்று, தனியார் குளிப்பேடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை மாணவர்கள எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே தவறு நிகழ்ந்திருக்கிறது. எப்படி?.
தேர்ச்சி இலக்கு 100 சதவீதம் என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. அப்படி எனில் யார்தான் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை, தமிழ் முதல் தாளில் வினா-விடைகள் மட்டுமே உண்டு. அதில் மனப்பாடமும் அமையும். இந்தப் பகுதியில், பத்திப் பத்தியாக மனப்பாடம் செய்து, அப்படியே பிழையில்லாமல் கக்கினால் நூறு என்பது சாத்தியமே. இதில் மாணவனின் மொழித்திறன் அறியப்படுவதில்லை. அவருடைய நினைவுத்திறன் மட்டுமே வியக்கப்டக்கூடியது. இப்படிப்பட்ட மாணவர் ஒரு செல்ல கிளிப்பிள்ளை. அவ்வளவே.
இரண்டாம் தாள், அதிகம் சவாலானது. அதாவது படைப்புத் திறன் மிக்கது. கவிதை எழுதுதல், பொதுக்கட்டுரை, துணைப்பாடக்கட்டுரை, கடிதம் எழுதுதல் போன்றவை இதில் அடக்கம். இப்பகுதியிலும் மாணவர்கள் தனியார், ஆசிரியர் குறிப்பேட்டைப் பயன்படுத்திக் கக்கி விடுகிறார்கள். திருத்தும் ஆசிரியர்களும் சந்தோஷத்தில் தவறு செய்து மதிப்பெண் அள்ளி வீசுகிறார்கள். எனவே விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை என்ற வரி உண்மையாகிவிடுகிறது.
எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கவிதை எழுதுவது, பொதுக்கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என்பது ஈ அடிச்சான் காப்பிதானே. இதற்கு ஏன் ஆசிரியர்கள் முழு மதிப்பெண் தருகிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் எழுதிய விடைகளில் உள்ள எல்லாப் பிழைகளையும் தமிழ் இலக்கணம் நன்கு தெரிந்த (பல தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது) ஆசிரியர்கள் மிகச் சரியாகத் திருத்திவிடுவாரக்ள். அவர்களிடம் நூற்றுக்கு நூறு ஜம்பம் பலிக்காது.
தமிழ் வினாத்தாளில் முதலிலேயே ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது. "விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல்வேண்டும்" என்று. உண்மையில் உங்கள் பிள்ளை / மாணவர் சொந்த நடையில்தான் எழுதுவாரா என்ற கேள்வியைப் பெற்றோரும் ஆசிரியரும் தமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.
தனியார் குறிப்பேட்டையோ, ஆசிரியரின் விடையையோ நகல் எடுத்து எழுதுவது தவறான செயல். ஒரு மாணவரின் தனிப்பட்ட மொழி ஆளுமை காணாமல் போகிறது. மொழிச்சிந்தனை ஒன்று அறவே இல்லாமல் போகிறது. நூற்றுக்கு அருகில் வரும் மாணவரை அழைத்து, புத்தகத்தில் இல்லாத ஒரு செய்தியைச் சொந்த நடையில் எழுதச் சொன்னால்போதும், மாணவர் நிலை என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்.
சொந்த நடையில் எழுதப்படாத எந்தவொரு விடைக்கும் நாம் முழுமதிப்பெண் அளிப்பது தவறான செயல். மொழியின் ஆளுமை என்பது சிந்தனைவயப்பட்டது. அவனுடைய மொழி ஆளுமையை அறிந்து கொள்ளவே கவிதையும் கட்டுரைகளும் கடிதமும். இதில் சொந்தநடை இல்லாதபோது, எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் தமிழ்ப் பண்டிட்கள் எப்படி நூறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே, விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றுதானே அர்த்தம். இந்த தவறைத் திரும்ப திரும்ப தமிழ்க்கூறும் நல்லுலக ஆசிரியர்கள் ஏன் செய்கிறார்கள்? என்றுதான் தெரியவில்லை.
அப்படியெனில் ஒரு மாணவர் சொந்தநடையில் விடைகளை, இலக்கணப் பிழையில்லாமல் எழுதும்போது, முழுமதிப்பெண் வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம். அதுவும சாத்தியமில்லை. ஒரு மாணவனின் கட்டுரை, கவிதை மீதான மதிப்பீட்டுப் பார்வை ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெவ்வேறாக அமையும்போது, நூற்றுக்கு நூறு சாத்தியமில்லை. பொதுக்கட்டுரையும் சரி, கவிதையும் சரி விரிவானவை, திறந்தவெளிக்கானவை. அங்கே முழுமையான விடை என்பது சாத்தியமில்லை. அது கணிதம் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே நூற்றுக்கு நூறு எப்போதும் சாத்தியமில்லை.
இதையெல்லாம் மீறி, வெறும் டப்பா விடைகளுக்கு நூற்றுக்கு நூறு என்று கல்வித்துறையும் பெற்றோரும் மார்தட்டிக்கொள்வது வேதனைக்குரியது, சிரிப்புக்குரியது, அவமானத்துக்குரியது.
உங்கள் பிள்ளையால் சொந்தநடையில் தமிழை எழுத முடியாதபோது, நீங்கள் தயவு செய்து சந்தோஷப்பட வேண்டாம். 100-ல் இருக்கும் பூஜ்யம், உங்கள் பிள்ளையின் மொழித்திறனாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சொந்தமாக எழுதவில்லை."