சமீபத்தில் ஒரு முக்கிய வேலையில் இருந்தேன். செல்பேசியில் ஓர் அழைப்பு, 'எனக்கு வாக்களியுங்கள்' என்று. என் கவனத்தைச் சிதறடித்ததால், வேளைகெட்ட நேரத்தில் இது எல்லாம் தேவையா என்ற தார்மீகக் கோபம் எழுகிறது.
ஒரு வாடிக்கையாளர் எண் நிச்சயம் அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்போவதில்லை. (அவர்களுக்கு மக்கள் யார் என்று எப்போதும் தெரியாது). இதை வாடிக்கையாளர் பயன்படுத்தும் நிறுவனங்கள் கொடுத்திருக்கலாம். வாடிக்கையாளரிடம் அனுமதி பெறாமல், அவருடைய அந்தரங்க எண்ணை, அரசியல் நிறுவனங்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் எப்படி தருகிறது? எந்தத் தார்மீகம் இதில் பின்பற்றப்படுகிறது?
ஒரு வாக்காளருக்கு, இந்த அழைப்பு எப்படியான மனநிலையை உருவாக்கும் என்பதை ஏன் கட்சிகள், தொலைபேசி நிறுவனங்கள் நினைப்பதில்லை? இதை எப்படி தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தப்போகிறது? இந்தத் தார்மீகத்தைத் தொலைபேசி நிறுவனங்கள் எப்படி காப்பாற்றப்போகின்றன?
நாய்கள் சாலையில் குரைப்பதுபோல், அரசியல் கட்சிகள் பொதுச்சாலையில் கத்துவதை எந்தக் குடிமகனும் மறுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடிக்கையாளரை அழைத்து வாக்குக் கேட்பது எவ்வளவு அநாகரிகம். ஒருவரின் அனுமதி இல்லாமல், அவருடைய எண்ணைக் கண்டறிந்து வாக்குக் கேட்பது என்பது, ஒருவரின் வீட்டிற்குள், அனுமதி இல்லாமல் உள்ளே செல்வதற்குச் சமம்.
தொலைபேசியில் வாக்குக் கேட்கும் உத்தி, புதிய தொழில்நுட்ப உத்தி. இந்த உத்தி பாராட்டத்தக்கதுதான் என்றாலும், வாக்காளர் எதிர்க்கட்சி என்றால், உங்களின் அழைப்பால், அவர் உங்களை மனதில் எவ்வளவு திட்டுவார் என்பதை ஊகித்துப்பாருங்கள் தலைவர்களே! தலைவிகளே!
ஒருவேளை எந்தக் கட்சியையும் விரும்பாதவர் எனில், அவர் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள் கட்சிகளே!
வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர் செல்பேசிக்கு அழைப்பு விடுத்து, ஓட்டு கேட்கும் இந்த மகா தந்திர உத்தியைக் கட்சிகள் நிறுத்திக்கொள்ள இயலும் என்றால் நல்லது. தேர்தல் ஆணையம் இந்த உத்தியைத் தயவுசெய்து தடை செய்யவேண்டும். வாடிக்கையாளர் எண்ணைத் தரும் நபர்கள், நிறுவனங்கள்மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது.
மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் செவி சாய்க்காத எந்த ஒரு கட்சிகளுக்கும், வாக்காளரின் செவி எப்போதும் செவிசாய்க்காது என்பதைக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, வாடிக்கையாளரின் வாக்காளரின் மனோநிலையைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தியைக் கட்சிகள் கைவிடுவதுதான் நல்லது. வாடிக்கையாளரின் எண் அந்தரங்கமானது. அது நண்பர்களுக்கானது, உறவினர்களுக்கானது, உடன் பணிபுரிபவர்களுக்கானது. கட்சிகளுக்கானது அல்ல. இதைக் கடந்து சில தார்மீகக் கேள்விகள் எழுகின்றன
1. வாடிக்கையாளரின் எண்ணை, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள எப்படி பயன்படுத்தலாம்?
2. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், எங்கிருந்து கட்சிகள் எண்ணைப் பெற்றன?
3. வாடிக்கையாளர் எண்ணைக் கொடுத்தவர் யார்? அல்லது எந்த நிறுவனம்?
4. வாடிக்கையாளர் எண்ணைத் தொலைபேசி நிறுவனங்கள் கொடுத்திருந்தால், அவை வாடிக்கையாளரிடம் முன் அனுமதி பெற்றனவா?
5. ஒருவரின் முன் அனுமதி இல்லாமல், ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துக் கேட்டும் இந்த உத்தியைத் தேர்தல் ஆணையம் எப்படி தடைசெய்யப்போகிறது?
கட்சிகளே! தயவு செய்து எங்களை அழைத்து வெறுப்பேற்றாதீர்கள். நீங்கள் உத்தமர் என்றால், உங்களுக்கு வாக்கு தானாக விழும்!
நீங்கள் 'செல்'லால் கேட்பதால் மயங்கி வாக்களித்திட மாட்டோம். ஆக்கப்பூர்வ செயலால் கேட்கப் பழகுங்கள்.
No comments:
Post a Comment