ருசியான... ஜவ்வரிசி கட்லெட்
பெரும்பாலும் கட்லெட்டானது காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ சாப்பிடக் கூடியது. அதிலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு வகையான ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரியுமா? இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸியானது. அதிலும் இந்த கட்லெட்டிற்கு முக்கியமான பொருள் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு தான்.
ஆகவே ஜவ்வரிசி கட்லெட் செய்யத் தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிமையான முறையில், படிப்படியாக எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடலாம். சரி, ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
படி: 1 இரவில் படுக்கும் போதே 250 கிராம் ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
படி: 2
3-4 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2-3 விசில் விட்டு வேக வைத்து, தோலுரித்து குளிர வைக்க வேண்டும்.
படி: 3
உருளைக்கிழங்கு குளிர்ந்ததும், அதனை மசித்தோ அவ்வது துருவியோ வைத்துக் கொள்ள வேண்டும்.
படி: 4
மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
படி: 5
கொத்தமல்லியின் இலைகளை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
படி: 6
சுவைக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதில் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி: 7
பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை, ஜவ்வரிசி மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
படி: 8
பின்னர் அந்த கலவையில் உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
படி: 9
அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
படி: 10
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
படி: 11
இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Thanks