Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 14 June 2014

இப்படிக்கு இவர்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து என்பது பெருந்திரளின் பாலே நடனம்
- டிமிட்ரி ஷோஸ்டாகோவிச் (1906- 1975), ரஷ்ய இசைக் கலைஞர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரேசிலைப் பொறுத்தவரை உணவு, உறக்கம், பானம் எல்லாமே கால்பந்துதான். பிரேசிலின் உயிரே கால்பந்துதான்.
- பீலே, பிரேசில் அணியின் முன்னாள் வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வா சாவா என்பது போன்ற ஒரு விஷயம்தான் கால்பந்து என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. கால்பந்து அதையும்விடத் தீவிரம் வாய்ந்த ஒன்று என்பதை அவர்களுக்கு நிரூபிக்க என்னால் முடியும்.
- பில் ஷாங்க்லி (1913-1981), ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து விளையாட்டில் எல்லாமே மிகவும் சிக்கலாகிவிடுகிறது எதிரணியின் இருப்பால்.
- ழீன்–பால் சார்த்தர் (1905-1980), தத்துவவாதி, நாவலாசிரியர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்தின் அடிப்படையே உற்சாகம்தான். அந்த விளையாட்டை மேலும் அழகாக்கும் எந்த யோசனையும் எனக்குப் பிடிக்கும்.
- ரொனால்டினோ, பிரேசில் அணியின் முன்னாள் வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெருவில் விளையாடும் குழந்தையைப் போலவே கால்பந்து விளையாடும்போது நான் உற்சாகமாக உணர்கிறேன். அப்படிப்பட்ட உற்சாகத்தைக் கால்பந்தில் நான் உணராத நாளில் அந்த விளையாட்டிலிருந்தே நான் வெளியேறிவிடுவேன்.
கடிகாரம் செய்வதைப் போலத்தான் கால்பந்து விளையாடுவதும், உறுதியும் துல்லியமும் இல்லையென்றால் திறமையும் நளினமும் வீணே.
- லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா வீரர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒழுக்கம், கடமை போன்றவற்றையெல்லாம் நான் கற்றுக்கொண்டதற்கு கால்பந்துக்குத்தான் நன்றிசொல்ல வேண்டும்.
ஆல்பெர் காம்யூ (1913-1960), எழுத்தாளர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்தைப் பொறுத்தவரை கடந்த ஆட்டத்தை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுவார்கள். நாம் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவும் பிரமாதமானவராக இருந்தாலும் சரி, கடந்த ஆட்டம் மட்டும்தான் எல்லோருடைய நினைவிலும் இருக்கும்.
- தியரி ஆன்ரி, பிரான்ஸ் கால்பந்து வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து விளையாடுவதாலேயே நற்பண்பு வந்துவிடாது. ஆனால், உங்கள் மோசமான குணங்களை அது அகற்றிவிடும்.
- டேரல் கே. ராயல், முன்னாள் அமெரிக்கக் கால்பந்து வீரர் (1924-2012)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எத்திசையும்உறுதியாக நின்ற உருகுவே
தென் அமெரிக்க நாடான உருகுவேதான் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் முதல் சாம்பியன். முதல் உலகக்கோப்பைப் போட்டி நடந்ததும் உருகுவேயில்தான். ஆனால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஐரோப்பிய நாடுகள் தயக்கம்காட்டின. 'அத்தனை தூரம் பயணம் செய்து யாரப்பா விளையாடுவார்கள்?' என்று அலுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், கடைசியில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லோவியா ஆகிய நான்கு நாடுகளின் அணிகளை மட்டும் அனுப்பின. இதனால் சங்கடமடைந்த உருகுவே, அடுத்து நடந்த இரண்டு உலகக்கோப்பைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. "எங்கூருக்கு வர மாட்டீங்க... ஒங்கூருக்கு மட்டும் நாங்க வரணுமோ?" என்று வீராப்பு காட்டிய உருகுவே, 1950-ல் பிரேசிலில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை மீண்டும் வென்றது. ரோஷமுள்ள சாம்பியன்தான்!

'அது கடவுளின் கை!'
கால்பந்து என்றால் பீலேவுக்குப் பின்னர் கடவுளாகப் போற்றப்படுபவர் அர்ஜெண்டினாவின் மரடோனா. மறக்க முடியாத எத்தனையோ கோல்களை அடித்துப் புகழின் உச்சிக்குச் சென்ற அந்த மேதையின் ஒரு கோல் மட்டும் சர்ச்சைக்குரியது. 1986-ல் மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக நடந்த போட்டியில் பிரிட்டன் வீரரை ஏமாற்றி பந்தைத் தலையால் தட்டி கோல் விழச் செய்தார் மரடோனா. உடனே, ஓடிச் சென்று அணியின் மற்ற வீரர்களை ஆரத்தழுவிக் கொண்டாடவும் செய்தார். ஆனால், அந்த கோலை, தலையால் மட்டும் அல்ல, கையாலும் தட்டினார் என்று பிரிட்டன் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அதை நம்பவில்லை. பலகாலம் கழித்து அந்த உண்மையை மரடோனா தனக்கே உரிய பாணியில் ஒப்புக்கொண்டார். "அந்த கோலை என் தலையும் 'கடவுளின் கையும்' இணைந்தே அடித்தன" என்று கூறிவிட்டார். ஆண்டவனிடம் அப்பீல் ஏது?

16 ஆண்டுகால சாம்பியன்!
இத்தாலிதான், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் நீண்டகால சாம்பியன். அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.1934-ல் போட்டியை நடத்திய இத்தாலியே கோப்பையை வென்றது. தொடர்ந்து 1938-ல் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய உலகக்கோப்பைப் போட்டி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நடைபெறவில்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். இந்த எட்டு ஆண்டு இடைவெளியையும் சேர்த்துத்தான் இத்தாலியின் 16 ஆண்டுகால சாம்பியன் சாதனை என்பது வரலாற்றில் மிக முக்கியம் அமைச்சரே!

சொந்த ஊரில் நொந்துபோன தென் ஆப்பிரிக்கா
2010-ல் உலகக்கோப்பை நடந்தது தென் ஆப்பிரிக்காவில். முதன்முதலாக, ஆப்பிரிக்க மண்ணில் நடந்த உலகக்கோப்பைப் போட்டி அதுதான். போட்டியை நடத்தும் நாடு என்பதால், முதல் சுற்றில் விளையாட அந்நாடு தகுதிபெற்றிருந்தது. ஆனால், அத்தனை பலமில்லாத அந்த அணி, உருகுவே அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று, முதல் சுற்றிலேயே வெளியேறியது. போட்டியை நடத்தும் நாடு முதல்சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது அந்தப் போட்டியில்தான்!

ஆசியாவின் நிறைவேறாத ஆசை
ஆசியாவில் ஓரளவு பலம் கொண்ட அணிகள் என்றால், தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறிப்பிடலாம். எனினும், தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த உலகக்கோப்பையில் எந்த ஆசிய நாடும் வென்றதில்லை. 2002-ல் இந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து உலகக்கோப்பைப் போட்டியை நடத்தின. இரண்டாவது சுற்றில் துருக்கியிடம் தோல்வியடைந்து ஜப்பான் வெளியேறியது. தென் கொரியா மட்டும் போராடி அரையிறுதி வரை சென்றது. ஆனால், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்தது.

நாட்டாமை… கார்டை மாத்திக் காட்டு
கால்பந்து போட்டிகளில் வீரர்களின் ஓட்டத்துக்குச் சமமாகப் போராடுபவர்கள் நடுவர்கள்தான். சும்மா சொல்லக் கூடாது, காளையின் பலத்துடன் களத்தில் நிற்கும் வீரர்களின் கோபதாபங்களுக்கு ஈடுகொடுக்கும் மன உறுதி பெற்றவர்கள் அவர்கள். இந்த முறை, 14 நாடுகளிலிருந்து 25 நடுவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஓசியானியா பகுதியிலிருந்து பங்கேற்கும் ஒரே நடுவர், நியூசிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓலேரிதான். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 25 நடுவர்களில் மூன்று பேர்தான் தொழில்முறை நடுவர்கள். மற்ற அனைவரும் பிற துறைகளில் பணியாற்றுபவர்கள். இந்தப் பட்டியலில் ஒரு வழக்கறிஞரும் இருக்கிறார். அப்ப சரி, நாட்டாமை பணி நல்லவிதமா நடக்கும்!

எடுபடுமா அமெரிக்கா?
உலகத்துக்கே நாட்டாமையாக இருக்கலாம். ஆனால், உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கென்று பெரிய சாதனைகள் கிடையாது. 2002 உலகக்கோப்பைப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய அமெரிக்கா ஜெர்மனியிடம் தோற்றது. அதுவே அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதனைதான். சூறாவளியாய் இயங்கும் சுண்டைக்காய் நாடுகளிடம் வல்லரசின் வலிமை எடுபடுமா என்பது சந்தேகம்தான்!


இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது?
இந்திய வீடுகளும் சரி; அரசியலும் சரி... விளையாட்டைப் புறக்கணிக்கவே செய்கின்றன
வேடிக்கையாக இல்லை இது! உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்தியக் கால்பந்தாட்டத்தின் வயது
உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.

இந்தியக் கால்பந்தின் பொற்காலம்
1951 முதல் 1962 வரையிலான காலத்தை இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சையது அப்துல் ரஹீமின் கால்வண்ணத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த அணியாகத் திகழ்ந்தது இந்தியா. 1951-ல் நடந்த ஆசியப் போட்டிகளில் இந்திய அணி சாம்பியன். தொடர்ந்து, கொழும்புப் போட்டிகளிலும் வெற்றி. 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு. தொடர்ந்து 1953 பர்மா, 1954 கொல்கத்தா, 1955 டாக்கா போட்டிகளில் வெற்றி. 1954-ல் மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டாவது இடம். 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடம். இடையில், 1958-ல் ஆசியப் போட்டியில் நான்காவது இடம், 1960 ஆசியக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வி என்று பின்னடைவுகளைச் சந்தித்தாலும், 1962 ஆசியப் போட்டியில் மீண்டும் வெற்றி. அதன் பின்னரோ, அப்துல் ரஹீமின் மறைவு இந்தியக் கால்பந்தாட்டத்தைச் சுருட்டியது.

விலகி நிற்பதின் துயரம்
கால்பந்தாட்டம் என்றில்லை, பெரும்பாலான விளையாட்டுகளில் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து புதைவையே சந்தித்திருக்கிறோம். ஹாக்கியில் நம் நிலை என்ன?
ஒருகாலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி தயான் சந்த். 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட ஹிட்லர் தன் நாட்டுக்கே வருமாறு அழைத்தார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்களை ஹாக்கியில் வென்றோம். 1980-க்குப் பின் என்னவானது?
இந்தியாவின் இன்றைய விளையாட்டுச் சாதனை யாளர்களாக அறியப்படும் பலர் அடிப்படையில் தங்கள் சொந்த பலத்தில் (பண பலத்தையும் சேர்த்துதான்) முன்னே வந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்த், கீத் சேத்தி, லியாண்டர் பயஸ், அபிநவ் பிந்த்ரா எல்லோர் கதையும் இதுதான்.
விளையாட்டு என்பது ஒரு தனிக் கலை. நம்முடைய வீடுகளும் பெற்றோரும் அதை ஒரு பகுதிநேரப் பொழுதுபோக்காகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பள்ளிக்கூடங்களும் விளையாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கியே வைக்கின்றன. அரசியல்வாதிகளோ வெட்கமே இல்லாமல், அங்கும் பணம் பண்ணத் திரிகிறார்கள். ஊடகங்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் கண்ணில் தெரிவதில்லை.
சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடும் செய்திகள் வெளியான 1990-ல் இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம்போல விளையாட்டு ஆர்வம் வந்தது. அந்தோ பரிதாபம்... அந்த ஆர்வமும் போட்டிக்குப் போட்டிகளை நடத்தும் ஆர்வமாக மாற வேண்டுமா? காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போட்டியிட்டோம். 1991-ல் சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கோதாவில் இறங்கியதும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்த வேண்டும் என்பது நமக்கு வெறியாக மாறியது. 2003-ல் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அப்புறம் சாவதானமாக 2007-ல் நிதி ஒதுக்கீடு செய்தபோது, போட்டியை நடத்துவதற்கான திட்டச்செலவு ரூ. 1,200 கோடி ரூ. 40,000 கோடியாக மாறியது.
அப்புறம் நடந்த கதைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். "ரூ. 960 கோடியில் புனரமைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கக் கட்டுமானப் பணி பல் இளிக்கிறது", "குர்காவ்னிலுள்ள கடார்பூர் விளையாட்டரங்க மேற்கூரை மழையில் இடிந்து விழுந்தது" என்று தினம்தினம் படித்த செய்திகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றனதானே?

பெய்ஜிங் அதிசயம்
பெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது உண்மையிலேயே அதிசயம். 1936-க்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்றால், அது 2008-ல்தான். கற்பனைசெய்து பாருங்கள்: 100 பதக்கங்கள்; அவற்றில் 51 தங்கம். எவ்வளவு மகத்தான சாதனை!
ஆனால், இந்தச் சாதனை சாதாரணமாக வந்ததல்ல; நீண்ட காலத் திட்டமிடுதலும் அசாத்தியமான உழைப்பும் சீனர்களின் இந்த வெற்றிக்குப் பின் இருந்தது. சீனா முழுவதும் 6.5 லட்சம் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. முழுத் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் 25 ஆயிரம் பேர் அங்கு பணியில் இறக்கிவிடப்பட்டனர். தன்னுடைய ஆர்வத்துக்கேற்ற விளையாட்டை தொழில்முறையாகக் கற்பதற்கான வாய்ப்பை சீனக் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலேயே அந்நாட்டு அரசு கொடுக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக அந்நாடு தீட்டிய திட்டத்தின், உழைப்பின் வெளிப்பாடுகள்.
நம்முடைய அரசும் திட்டமிடுகிறது; பதக்கங்களைக் குவிக்க. எப்படி என்று பாருங்கள். 2009-ல் விளையாட்டுக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,706 கோடி. 2010-ல் இது ரூ. 3,565 கோடியாகக் குறைந்தது. 2013-லோ ரூ. 1,219 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற அரசு சாராத அமைப்பின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 2,500 கோடி என்கிற தொகையுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்… நம்முடைய அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்கள்!
இந்தியாவின் மோசமான கிராமங்களில் ஒன்றிலிருந்து, மிக சாதாரணமான குடும்பம் ஒன்றிலிருந்து சர்வதேசத் தடகள வீராங்கனையாக உருவெடுத்த சாந்தியின் கதை பின்னாளில் என்னவானது என்று யாருக்கேனும் தெரியுமா? ஒருநாள் அவர் செங்கல் சூளையில் வேலைசெய்துகொண்டிருந்த படம் பத்திரிகைகளில் வெளியானதும் அரசாங்கம் போனால் போகிறது என்று அவருக்குத் தடகளப் பயிற்சியாளர் வேலை கொடுத்தது. பிறகு, ஒருநாள் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், சொற்ப சம்பளம் ஐந்தாயிரம் போதவில்லை என்று கூறினார். பின் ஒருநாள் பல முறை முறையிட்டும் யாரும் அவர் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிலையில் அந்தத் தாற்காலிக வேலைலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நண்பர்களிடம் விசாரித்தேன். பயிற்சியாளர் பணிக்கு விளையாட்டு மட்டும் தெரிந்தால் போதாது; படிப்பும் வேண்டும் என்பதால் இப்போது பிழைப்புக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த நாடு ஏன் வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது என்று புரிகிறதா?