Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Saturday, 31 May 2014

பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா?




பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா? 
என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதறவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேசமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவி களைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம்.
தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் 'ரொமான்டிக் லுக்' விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப் படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே, ஒரு நூறை நெருங்கும். 'யார்', 'மை டியர் லிஸா', 'ஜென்மநட்சத்திரம்', '13-ம் நம்பர் வீடு' 'வா அருகில் வா' போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், 'யாவரும் நலம்', 'பீட்சா' போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக 'யாமிருக்க பயமே' என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே நம்பியிருக்க மாட்டார்!
என்றாலும், அறிவியல்பூர்வமாக எந்த அடிப்படையும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிய கதைகள், திரைப்படங்கள் மக்களைக் கவர்வது ஏன்? பேயின் இருப்புபற்றிய சந்தேகம் இருந்தாலும் மனதில் கிலியுடன், பாதுகாப்பான வளையத்துக்குள் அமர்ந்து பேய்ப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களால் அந்த பய உணர்வை ரசிக்க முடிகிறது என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தான் எழுதிய 'காஞ்சனை' கதைகுறித்த கேள்விக்கு "பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறதே!" என்று புதுமைப்பித்தன் பதிலளித்திருக்கிறார். "நம் நினைவுகள்தான் பேய்கள்" என்று மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கதைகளை அடிப்படையாக வைத்துப் பல 'திகில்' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆதி மனிதர்களாகக் குகைகளில் நாம் வாழ்ந்துவந்த காலகட்டத்தில்தான் நம்மிடையே பேய் பற்றிய பயம் வந்தது. ஒருவேளை, பேய் நம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை தோன்றுவதற்கும் காரணமோ? விவசாயம், அறிவியல், கல்வி போன்ற விஷயங்கள் அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில், புதிரான சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஏதேனும் ஒரு 'சக்தி'தான் காரணம் என்று குகை மனிதர்கள் அஞ்சினர். உதாரணமாக, குகைக்கு வெளியே கற்கள் உருண்டோடினால்கூட, கண்ணுக்குப் புலப்படாத சக்திதான் அதற்குக் காரணம் என்று குகை மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்த பயம் நம் மனதின் எங்கோ ஓர் மூலையில் படிந்துவந்திருக்கிறது. அது இன்றும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.
கல்வியும் அனுபவமும் இந்த நம்பிக்கைகள் மீதான கேள்வியை நம்முள் எழுப்பியுள்ளதால், இந்த விஷயங்களைக் கதைகளில் மட்டும் ரசிக்கும் அளவுக்கு நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது.
காட்டில் அமர்ந்து தவம் புரிந்த இரவுகளில், உடனடியாக விளக்க முடியாத ஒலிகள், அசைவுகளால் அச்சமுற்றதாக புத்தரே குறிப்பிடுகிறார். அறிவுபூர்வமாக அவற்றை அணுகிய புத்தர், தன் பயத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உணர்ந்தார்.
எனினும், கலைகளில் அறிவையும் தாண்டி கற்பனைகளே அதிகப் பங்கை வகிக்கின்றன. எனவே, பேய், டிராகுலா, ஓநாய் மனிதன் உள்ளிட்ட நிரூபணமாகாத விஷயங்கள்குறித்த கலைப்படைப்புகள் இன்றும் வெற்றிபெறுகின்றன. 'யாமிருக்க பயமே' அவற்றில் ஒன்று.
--
Thanks And Regards


கோச்சடையானும் ஏளனப் பார்வையும்



கோச்சடையான் வெளியான முதல் நாள். | படம்: வி.கணேசன்

ரஜினி படம் பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. முதற் காரணம்...
ரஜினி.
"ஒரு பொம்மை படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்குச் செல்ல வேண்டாம். ட்ரைலர் பார்க்கையில்- கார்ட்டூன் நெட்வொர்க்கில் போடப்பட்ட பாண்டவாஸ் படம்கூட இதைவிட நன்றாக அமைந்திருந்ததே!"
"ஒரு குறும்படம் கூட இயக்காமல் முதல் படத்துலையே ரியல் டைம் மோஷன் கேப்சர் அணுகுமுறையை யாராவது கையாளுவார்களா?"
"இப்படிப்பட்ட விஷப் பரீச்சைக்கு சூப்பர் ஸ்டார் இரையாகப் போகிறார்... இதை வேறு தியேட்டரில் பார்த்துத்தான் உணர வேண்டுமா?"
"ஹாலிவுட்டில் அவதார், 3௦௦ போன்ற படங்கள் பார்த்திருக்கிறோமே... இதைத் தாண்டியுமா கோச்சடையான் ஈர்க்கப் போகிறது?"
இப்படிப் பல கேள்விகள் கோச்சடையான் பார்க்க வேண்டாம் என்று மனதில் அஸ்திவாரம் போட்டது.
கடைசியில் படம் வெளியாகிவிட்டது. முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் என்று தோன்றுகையில் கேள்விகளால் மனதில் தொடுத்து அமைக்கப்பட்ட வேலி, ரஜினி என்ற காந்தச் சக்தியால் சுக்கு நூறாக உடைந்து திரையரங்கின் வாசலுக்கு இழுத்துச் சென்றது.
திரையரங்கிற்கு நேரடியாக சென்று கடைசி நிமிடத்தில் எப்படியாவது அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி பார்க்க நேர்ந்தது.
இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்?
நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு 'உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்' என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது.
நண்பன் ஆதியின் படையில் தளபதியாக கைகோக்கிறார் ரஜினி. அப்போ இது மீண்டும் ஒரு தளபதியா என்று யோசித்தால் அந்த எண்ணத்திற்கு அப்படியே ஒரு முட்டுக்கட்டை போட்டு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை டேக் டைவர்ஷன் எடுக்கிறது.
கோச்சடையான் வரலாறு சார்ந்த படம்தான். ஆமாம். நம் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பார்த்து வரும் அதே ரத்தம், அதே பழி, அதே வேட்டை. குடியிருந்த கோயில் தொடங்கி சிலம்பாட்டம் வரை பார்த்து பழக்கப்பட்ட அதே பழிவாங்கும் படம் தான் கோச்சடையானும். இருப்பினும், அப்படங்களுடன் இக்கதையை சரித்திரத்துடன் இணைத்ததிலும் அதற்கு ரஜினியை புகுத்தியதிலும், ஆனிமேஷனில் டெலிவர் செய்த விதத்திலும் தான் கோச்சடையான் வேறுபடுகிறது.
முதல் காட்சியில் ரஜினி அறிமுகம் செய்யப்படும்போது எத்தனை உத்வேகம் இருக்கிறதோ அதே உத்வேகம் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. மீண்டும் கூறினால் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை. முற்றிலுமாக ரஜினியின் திரை ஆளுமையை அறிந்து கொண்டு, ரசிகர்களையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வண்ணம் திரைக்கதை அமைத்ததில் சபாஷ் போடா வைக்கிறார் இவர்.
குதிரைப் படைகளில் புகுத்தப்பட்ட சக்கரம் போலத்தான் ரஹ்மானின் இசை இப்படத் திரைக்கதைக்கு. குதிரை எப்படி வளைகிறதோ அதற்கு ஏற்றார் போல் அத்தனை வளைவுகள் பயணத்திற்க்கேற்றார் போல் புதிய புதிய பாதைகள் அமைத்தது சுவாரசியத்தில் அமர வைக்கிறது. படத்தில் குறிப்பிடப்படாத மற்றொரு கதையாசிரியர், வசனகர்த்தா வைரமுத்து. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் பாடல்கள் படத்தின் ஜீவனாக இப்படத்தில் தோன்றியது.
நாசர்: ரானா இனி உனக்கு வாய்ப்புகள் அமையாது
ரஜினி: என் அன்பு மன்னா, வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாசர்: பகல் கனவு காணாதே
ரஜினி: இனி உறங்கினால் தானே கனவு கண்டிட?
இப்படி இரண்டாம் பாதியில் எதுகை மோனை குன்றாது ரஜினி பேசும் வசனங்கள் மயிர் கூச்சல் பெற வைக்கிறது.
ரஜினியின் நேசியாக 'கோச்சடையான்' திருப்தி தந்திருக்கிறது என்றால் தீபிகா படுகோனை விழுந்து விழுந்து ரசித்த கலாரசிகனுக்கு கோச்சடையான் கொஞ்சம் இல்லை... பலத்த ஏமாற்றத்தை தான் தருகிறது. ஜாக்கி ஷராஃப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் இவர்களை நன்கு சித்தரித்தவர்கள், நாகேஷை மீட்டுக் கொணர்ந்து வந்தவர்கள் தீபிகா படுகோனையும் நன்கு காட்டியிருக்கலாம். பக்ஷே அது மட்டும் பெரிய ஏமாற்றம் சாரே.
கதாப்பாத்திரங்களின் உடையலங்காரம், வாளின் ஓசையேது மூங்கிலின் ஓசையேது என்று ஒவ்வொரு பொருளுக்குரிய சப்தத்தை துள்ளியமாக பதிவு செய்த ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பு, நிழற்படங்களின் வண்ணங்கள் படத்தின் இன்னபிற சிறப்பு அம்சங்கள். அக்மார்க் ரஜினி படம் பார்க்கின்ற எபஃக்ட்டினை வசனங்கள் அளித்துள்ளது.
ஹாலிவுட் ஆனிமேஷன் படங்கங்களில் எல்லாம் கதாப்பாத்திரத்தின் விழிகளை எல்லாம் எப்படி தத்ரூபகமாக சித்தரித்து இருப்பார்கள் இங்கே எல்லாரின் விழிகளும் ஒரே போலத் தானே இருக்கிறது, படம் சில இடங்களில் இருளோ எனத் தோன்றியது, கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் இப்படி எத்தனையோ கேள்விகள் தொடுத்து ஏளனம் செய்யலாம். ஆனால் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.டி.ராஜசேகர், ரசூல் பூக்குட்டி, சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராஃப் இவர்களை வைத்துக் கொண்டு இதே கதையுடன் ஒரு கமர்சியல் படம் இயக்கி இருந்தால் பாலிவுட் ஓவர்சீஸ் வரை விற்று ஏகத்துக்கு லாபம் பார்த்திருக்கலாம். இதற்கு மாறாக முதற் படத்திலேயே பல ஜாம்பவான்களை வைத்து இந்தியன் சினிமாவில் புதுமையாக ஒரு பிரம்மாண்ட மோஷன் பிக்சர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தைரியம் நம்முள் எத்தனை பேருக்கு வரும்.
இன்று திருவிளையாடல் தருமியை போன்ற ஒப்பனையுடன் நாகேஷை மீட்டுக் கொணர்ந்ததை பார்க்கும் போது அப்படியே நெகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. இனி பிராட்பிட்டினை ஹாலிவுட்டிலிருந்து இறக்கி ஆல்தோட்ட பூபதி பாட்டிற்கு குத்தாட்டம் போட வைக்கலாம், துப்பாக்கி பார்ட்-2விற்கு லியோநார்டோ டிகாப்ரியோவை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ன கெட்டு விடப் போகிறது யார் கேட்கப் போகிறார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையும் இணைத்து தளபதி போன்ற ஒரு கதையை அமைத்து நடிக்கச் செய்யலாம். இனி காலத்தால் அழியாத கலைஞர்களை நமது சந்ததியினரையும் அறிய வைக்கலாம். இந்த எண்ணங்கள் இந்தியக் கலைஞர் பலருள் தோன்றிட கோச்சடையான் வித்திட்டுள்ளது.
நம் ஊரில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனிமேஷன் படம் என்ற பிம்பத்தையும் கோச்சடையான் சிதைத்துள்ளது. ரஜினி தனது ஸ்டைலுடன் முறையாக பரதம் பயின்று ஆடினால் இத்தனை நன்றாக இருக்குமா என்ற யோசனையும் கடந்து அற்புதமாக அமைந்துள்ளது கோச்சடையான் ஆடும் சிவதாண்டவம்.
சௌந்தர்யா தனது தந்தையை எப்படிப்பட்ட சிம்ம சொப்பனமாக கண்டுள்ளார் எப்படி எல்லாம் பார்க்க நினைக்கிறார் என்பதை ரஜினி, ஷோபனா இணையும் ஆடல் காட்சி பிரதிபலித்தது. இயக்குனரை கடந்து ஒரு மகளால்தான் தான் விரும்பும் அப்பாவை இப்படி பிரதிபலிக்க முடியும்.
'வாழ்வை வென்றாய் வையம் சென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா' என்ற வைரனின் வரிகளுக்கு ஏற்ப என்றும் அழியாத சொப்பனமாய் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் அவதரித்துள்ளார்.
ஏளனப் பார்வையுடன்தான் திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் ஏளனப்பட்டதென்னவோ என் பார்வைதான். கோச்சடையான்... ஆனிமேஷனில் வரலாறு கலந்த மசாலா ஷம்போ மஹாதேவ்!
- Thanks and Regards

Saturday, 3 May 2014

தேசிய விருது வென்ற அர்த்தமுள்ள சினிமா

ஷிப் ஆஃப் தீசஸ்

ஷிப் ஆஃப் தீசஸ்

61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ள 'ஷிப் ஆஃப் தீசஸ்' படம் குறித்த பார்வை...
யாரோ ஒருவர் திரையில் ஆடுகிறார், காதல் செய்கிறார், சண்டை போடுகிறார், பன்ச் வசனம் பேசுகிறார், நாயகியை மணம் முடிக்கிறார். இதைப் பார்த்து நான் அடைந்த பலன் என்ன? எதற்காக என் நேரத்தை, பணத்தை விரயம் செய்கிறேன்? இந்த படம் பார்த்து நான் கொண்டு செல்லப் போவது என்ன?
இந்தக் கேள்விகள் உங்களுள்ளே எப்போதாவது எழுவதுண்டா?
பொருளற்ற மசாலாக்கள் போர் அடித்துவிட்டதா? அர்த்தமுள்ள சினிமாவினை தேடி வருகிறீர்களா? கருத்திற்கு விதை போடும் ஒரு சினிமா - நல்ல சினிமா. அதுவே உன்னத சினிமா. இந்திய சினிமாவில் வர்த்தகத்திற்கு வளைந்து கொடுக்காத உன்னத சினிமாக்களை தேடி வருகிறீரா? முதலில் கையைக் கொடுங்க பாஸ், உங்களை போன்றோரைத் தான் தேடி வருகிறேன்.
கிரேக்க மன்னன் தீசஸ் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து உருவாகிய ஒரு சிந்தனை தான் "ஷிப் ஆப் தீசஸ்".
ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது. இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த அக்கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது. இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?
இந்த சிந்தனையில் கப்பலிற்கு பதிலாக மனிதனை வைத்து உயிர், வாழ்க்கை, கொள்கை, சமயோஜிதம் இப்படி பல தரப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் 'ஷிப் ஆப் தீசஸ்'.
இக்கதையில் மூன்று நாயகர்கள். மூன்று பேருக்கும் வாழ்க்கை பற்றிய வேறுபட்ட பார்வை, ஒவ்வொருவருக்கும் தனி கொள்கை. நாம் வாழ்க்கையில் கடந்த, கடக்கவிருக்கும் யாராக வேண்டுமானாலும் இம்மூவர் இருக்கலாம்.
ஒருவர் ஓர் இடத்தில் இருக்கும் சப்தத்தை வைத்து அவ்விடத்திலிருக்கும் சூழலை மனதில் பதிவு செய்து அதை காட்சிப்படுத்தும் பார்வையற்ற பெண் போட்டோக்ராஃபர். பார்வையல்லாதவர் தான் இவர் என்றாலும் இவர் பார்க்கின்ற உலகத்தை, இவரது பார்வையை இவர் எடுத்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும். தன் கணவனே பாராட்டினாலும் தான் எண்ணிய வெளியீடு புகைப்படத்தில் கிட்டாத பட்சத்தில் அதை கிழித்தெறியவும் தயங்காத குணம் இவருக்கு. பார்வையற்ற இவருக்கு ஒரு மனிதனின் தானத்தால் பார்வை வருகிறது.
மற்றொருவர் ஒரு பிட்சு. தன்னைப் போன்று பிற உயிர்க்கும் இவ்வுலகில் வாழ அருகதை உண்டு என நினைக்கும் சிந்தனை இவருக்கு. மாத்திரை, மருந்து உருவாக்குவதில் எண்ணற்ற விலங்குகள் இரையாக்கப்படுவதையும், வதைபடுவதையும் எதிர்த்துப் போராடுகிறார் இவர்.
லிவர் சிரோசிஸ் நோயினால் இந்த பிட்சுவின் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப் படுகிறது. மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மருத்துவர் எச்சரித்தும் தன் கொள்கையிளிருந்து வழுவாது நிற்கிறார். வலி உயிரை வாட்டுகிறது. தேகம் கரைகிறது, இருந்தும் எண்ணத்தில் சிதைவில்லை.
தான் கொண்ட கருத்திற்காக உலகத்தை சிதைக்கும் தீவிரவாதிக்கும், தன்னையே சிதைத்துக் கொள்ளும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்கிறார். உயிர் வாழத்தான் கொள்கை உயிரே போகையில் கொள்கை கொண்டும் என்ன பயன்? உன் கொள்கை உலகத்தில் என்ன வித்தியாசம் உருவாக்கும்? என்று அவர் கேள்வி கேட்கிறார். 'எதுவும் இல்லாததற்கு ஏதோ இருக்கிறது என்ற வித்தியாசம் உண்டாக்குமே அது போதும்' என்று பிட்சு பதிலளிக்கிறார். நாட்கள் நகர நகர, உடல் நலம் மோசமடைய கடைசியில் கொள்கையும் சிதைகிறது மருந்து எடுக்க ஒப்புக் கொள்கிறார்.
மூன்றாவது நபர் முதல் இருவரிலிருந்து வேறுபட்டு நிற்பவர். இவருக்கென்று கொள்கையும் கிடையாது வாழ்க்கை பற்றிய பார்வையும் கிடையாது. ஸ்டாக் ப்ரோக்கராக இருக்கும் இவ்விளைஞன் தன் பாட்டியை பார்த்துக் கொள்ள அவளுடன் மருத்துவமனையில் தங்குகிறான். சமூக அக்கறை கொண்ட இவர் பாட்டி, உயிர்கள் பற்றிய பார்வையை, சமுதாயம் மீது செலுத்த வேண்டிய அக்கறையை புகட்டுகிறார்.
நாளிதழில் கிட்னியை அப்பாவிகளிடம் திருடி பிறருக்கு அளித்த மருத்துவர் கைது என்று செய்தி வெளிவருகிறது.
சமீபத்தில் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்ட செய்தி இவருள் கேள்வியை எழுப்புகின்றது. தன் உடம்பில் புகுத்தப்பட்ட கிட்னி வேறொரு அப்பாவியை ஏமாற்றி கிடைத்ததோ? என்ற ஐயம் இவருக்கு பிறக்கிறது. ஒரு தேடல் இவர் மனதினுள் தொடங்குகிறது. தனக்கு தானம் செய்த மனிதர் என நினைத்து ஒருவரை காணச் செல்கிறார்.
'வேண்டாம், அங்க போகாதே ஒரு வேளை அவன் உனக்கு புகுத்தப்பட்ட கிட்னியை திரும்பித்தர கூறினால் என்ன செய்வாய்?' என்று நண்பர் கேட்க 'கொடுத்திடுவேன்' என்று பதிலளிக்கிறார். பிறகு நண்பர்களால் தனக்கு புகுத்தப்பட்டது இறந்த ஒரு மனிதரிடமிருந்து எடுக்கப்பட்டதென்று அறிந்து கொள்கிறார். இருந்தும் அந்த அப்பாவி மனிதனுக்கு உதவி செய்ய முன்வருகிறார்.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அம்மனிதர் மருத்துவரால் ஏமாற்றப்பட்டு இரு சிறுநீரகத்தையும் இழந்து நிற்கிறார். இவருக்காக உதவும் பயணத்தில் அவ்விளைஞன் மனதில் சமூக அக்கறை பிறக்கிறது.
கடைசியில் இம்மூவருக்கும் ஓர் இடத்திற்கு வரக்கூறி அழைப்பிதழ் வருகிறது, செல்லும் இடத்தில் ஒரு காணொளி திரையிடப்படுகிறது. அதில் ஒரு மனிதனின் ஆசைகள், கனவுகள் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கும் கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மால் உணர முடிகிறது. திரையில் தோன்றிய அவ்விளைஞனின் உடல் பாகங்களே இம்மூவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காட்சிக்குப் பிறகு 'ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?' என்ற சிந்தனை வைக்கப்பட்டு படம் முடிகிறது.
அமைதியான சூழலில் பார்த்தால் இப்படத்தில் அமைந்துள்ள அற்புதமான ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உயிரூட்டும் நடிப்பு, சிந்தனை மிக்க வசனங்கள், நுட்பமான ஒலியமைப்பு கண்டிப்பாக உங்களை நிஜ உலகத்திற்கு அழைத்துச் சென்று அதை பார்க்கின்ற ஆரோக்கிய பார்வையினையும் விதைக்கும்.
சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் படங்களுக்கிடையே நல்ல சிந்தனைக்கு அசை போடும் 'ஷிப் ஆஃப் தீசஸ்' ஓர் ஆத்மார்த்த அனுபவம்.