Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday, 4 June 2013

அந்தமான் நிகோபார் தீவுகள் - Andaman and Nicobar - The Aqua Serene Isles

அந்தமான் நிகோபார் தீவுகள் – ஆழிசூழ் அமைதிக்கு நடுவே வீற்றிருக்கும் சொர்க்கத்தீவுகள்

பொதுவாக வெப்பப்பிரதேச கடற்கரைச்சுற்றுலா என்றாலே நாம் அனைவரும் தேடுவது சந்தடியற்ற, தனிமை கவிழ்ந்திருக்கும் எழிற்கடற்கரைகளைத்தான். அது பிரேசில் நாட்டு அமேசான் ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி ஸ்பெயின் நாட்டு 'இபிசா' கடற்கரையாக இருந்தாலும் சரி, 'தனிமை' மட்டுமே ஒரு சுற்றுலாப்பயணியை 'சாந்த நிலை'க்கு இழுத்துச்சென்று இயற்கையோடு ஒன்ற வைக்கிறது. அப்படி ஒரு தனிமையான அமைதியான மாசுபடாத கடற்கரைச்சூழலை தேடும் பட்சத்தில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் - இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் அன்றி வேறில்லை.  வாழ்வில் ஒரு முறையாவது இந்தியப்பயணிகள் விஜயம் செய்யவேண்டிய தீவுச்சொர்க்கமே இந்த அந்தமான் தீவுப்பிரதேசம்.
அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு - எலிபேண்ட் பீச்

அந்தமான் நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு

அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு விலகி தென்கோடியில் வங்காளவிரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு) பிரதேசமாகும். சுமார் 8000 ச.கி.மீ க்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த தீவுகளில் மனித சுரண்டலுக்கு உட்படாத இயற்கை வளம் நிரம்பி வழிகிறது.
இந்த இந்திய யூனியன் பிரதேசமானது 'அந்தமான்' மற்றும் 'நிக்கோபார்' என்ற இரண்டு தனித்தனியான -10 டிகிரி வடக்கு அட்ச ரேகையால் பிரிக்கப்பட்ட - தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் முக்கிய போக்குவரத்து இணைப்பான விமான நிலையத்தை கொண்டுள்ளதுடன், இந்த தீவுப்பகுதியிலேயே அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகவும் விளங்குகிறது.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து மற்ற சிறு தீவுகளுக்கு விஜயம் செய்ய பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும்.
இந்த கடலடி மலைத்தொடர் அமைப்பு தெற்கு வடக்காக 800 கி.மீ நீளத்துக்கு நீண்டு அமைந்துள்ளது. விமானமார்க்கம் தவிர, சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களிலிருந்து 'ஃபெர்ரி' எனப்படும் 'சொகுசு பயணக்கப்பல்' மூலமாகவும் போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள்

முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்'ஸ்கூபா டைவிங்' எனப்படும் அற்புதமான 'கடலடி காட்சிப்பயணம்',  விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இந்திய பயணிகளுக்கு 'விசா' மற்றும் 'பணமாற்றம்' போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் 'ஸ்கூபா டைவிங்' அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.  
கன்னிமை குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம்.
இது போன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலை பயணிகள் சிரமமில்லாமல் ரசித்து மகிழ்வதற்காக இங்குள்ள உள்ளூர் மக்கள் இயற்கையோடு இயைந்த கட்டமைப்புகளையும், ரிசார்ட் வசதிகளையும் உருவாக்கி சூழலின் தூய்மை கெடாமல் ஒரு ஒழுங்குட்பட்டு பேணிவருகின்றனர். 
அந்தமான் நிகோபார் தீவுகளில் 2200 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் 1300 வகைகள் இந்திய நிலப்பகுதியில் வளர்வதில்லை என்பதும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்தன்மையான இயற்கை வளத்தை எடுத்துச்சொல்ல போதுமானது.
அலங்கார சங்குச்சிப்பிகள், முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தியாவின் ரகசிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தீவுப்பகுதி குறிப்பிடப்படுவது ஏன் என்பதை இங்கு விஜயம் செய்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள 'ஹேவ்லாக்' தீவின் 'ராதாநகர்'  கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக 'டைம்' பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த 'ஹேவ்லாக்' கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று.
அந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் 'ஜாலிபாய் தீவு' ஆகும். மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் 'மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' (தேசிய கடற்பூங்கா) அல்லது 'வாண்டூர் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுகிறது.
சுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும் இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் தரிசிக்கலாம். 
உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் என்று 'இயற்கையின் அதிசயங்களை' எல்லாம் சுமந்து வீற்றிருக்கும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்வது அவசியம்.

தீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் 'போர்ட் பிளேர்'க்கு விமான சேவைகளை இயக்குகின்றன.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான 'நான்கௌரி' எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

அந்தமான் நிகோபார் தீவுகள் ஈர்க்கும் இடங்கள்

ஹேவ்லாக் தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள்

ஹேவ்லாக் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவுக்கு காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு - நீலவானத்தை முத்தமிடும் சலனமற்ற பச்சை நீரலைகள்!
அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் விஜயம் செய்கின்றனர்.
இந்த தீவில் மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என்பவையே அவை.
இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகி பல கிலோ மீட்டர்களுக்கப்பால் உள்ள இந்த சொர்க்க தீவுகளில் இந்தியப்பெயர்களை கேட்கும்போதே வியப்பும் பெருமையும் ஏற்படுவதையும் நம்மால் உணரமுடியும்.
மேற்சொன்னவற்றில் ராதா நகர் கடற்கரையை 'ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான 'டைம்' பத்திரிகை 2004ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியுள்ளது.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை 'ஃபெர்ரி' சொகுசு படகுகள் (போர்ட் பிளேரிலிருந்து) இயக்கப்படுகின்றன.
இவற்றுக்கான கட்டணம் சாதாரணமாக 5 முதல் 8 அமெரிக்கன் டாலர்கள் வரை இருக்கலாம். சர்வதேச சுற்றுலாத்தள அடையாளம் உள்ளதால் இப்படி டாலர்களில் கட்டணம் குறிப்பிடப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாகிறது.
எனினும் இவை குறைவான கட்டணம்தான் என்பது ஒரு ஆறுதலான விஷயம். கட்டுமரப்படகு மூலமாகவும் இயற்கையை ரசித்தபடியே பயணிக்கலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும். நேரம் ரொம்பக்குறைவாக இருக்கிறதே என்பவர்களுக்காக 'பவான் ஹான்ஸ்' ஹெலிகாப்டர் சேவைகளும் போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு கிடைக்கின்றன.
ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது நல்லது.
ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.
ஒரு மதிய நேரத்தை இந்த கடற்கரையில் கழித்துவிட்டு உள்ளூர் கடலுணவையும் ருசித்து முடிக்கும்போது 'இது போதும் வாழ்க்கையில்' என்று மனம் கிளர்ச்சியடைவதை உணரலாம். ராதா நகர் கடற்கரைக்கு அருகில் 'எலிபேண்ட் பீச்' என்ற மற்றொரு அழகிய கடற்கரையும் உள்ளது.
நடந்தே இந்த கடற்கரைக்கு செல்ல முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் ராதா நகர் கடற்கரையிலிருந்து இந்த 'எலிபேண்ட் பீச்' கடற்கரைக்கும் நடந்து செல்லும் அனுபவம் உங்களை மேகத்தில் மிதப்பது போன்ற உவகைக்கு இழுத்து செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை.
அப்படி ஒரு இயற்கை ஸபரிசத்தை இந்த கடற்கரை நடைப்பயணத்தில்  உங்களால் உணரமுடியும். நடக்க முடியாதவர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலமாகவும் செல்லலாம்.
அது மட்டுமல்லாமல் இங்கு டாக்சி வசதிகள் மற்றும் வாடகை ஸ்கூட்டர்கள் போன்றவையும் 'ஒரு நாள் வாடகை'க்கு குறைந்த கட்டணத்தில் (200 ரூபாய்) கிடைக்கின்றன. சுதந்திரமாக நம் விருப்பம்போல் தீவை சுற்றிவருவதற்கு இந்த வாகன வசதிகள் ஏற்றவையாக உள்ளன.
அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான 'ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்ய தேவைப்படும் வசதிகளான 'ஸ்பீட் போட்' எனப்படும் அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் 'டிகம்ப்ரஷன் சேம்பர்கள்' போன்றவை அந்தமான் தீவுகளில் இல்லை.
பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான 'ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன.
இவை யாவுமே குறைந்த கட்டணங்களை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஸ்படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீருக்கடியில்  மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமேயில்லை என்பதை ஹேவ்லாக் தீவில் ஒரு முறை டைவிங் பயணம் மேற்கொண்டபிறகு ஒப்புக்கொள்வீர்கள். 
'ஸ்கூபா டைவிங்'கிற்கு அடுத்தபடியாக டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்துக்கும் இந்த ஹேவ்லாக் தீவு பிரசித்தி பெற்றுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்காகவே வழிகாட்டிகளின் கூடிய ஒருங்கிணைந்த மலையேற்ற சுற்றுலா சேவைகளை பல்வேறு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன.
அந்தமான் தீவுப்பிரதேசத்திலுள்ள மற்ற தீவுகளை போல் அல்லாமல் இந்த ஹேவ்லாக் தீவில் தங்கும் வசதிகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை பல்வேறு கட்டண வசதிகளுடன் அமைந்துள்ளன.
கஃபே டெல் மார் மற்றும் வைல்ட் ஆர்க்கிட் எனப்படும் இரண்டு ஹோட்டல்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மணலையும், சூரியனையும், மரகதப்பச்சை நீரையும் போதுமென்றளவுக்கு ரசித்தபின் இங்குள்ள பிஜோய் நகர் எனப்படும் கிராமப்பகுதியில் உள்ளூர் ஞாபகார்த்த கைவினைப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளில் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
மறக்காமல் வேண்டுமென்ற அளவுக்கு இளநீரை ருசி பார்க்கவும் மறக்க வேண்டாம். இது மட்டுமன்றி உற்சாக மதுபானங்கள் மற்றும் பீர் போன்றவையும் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன. இந்திய யூனியன் பிரதேசம் என்பதால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட் பிளேர், அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான இந்த போர்ட் பிளேர் நகரம் தெற்கு அந்தமான் தீவில் அமைந்துள்ளது. இது அந்தமான் தீவுக்கூட்டங்களிலேயே பெரிய தீவாகும்.
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - அறிவியல் பூங்கா 
இந்த தீவின் தென்கோடியில் போர்ட் பிளேர் உள்ளது. வருடமுழுதும் இனிமையான வெப்பப்பிரதேச பருவநிலையை பெற்றுள்ளதோடு போதுமான அளவு மழையையும் இந்த தீவுப்பிரதேசம் பெறுகிறது.
இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினர்கள் மத்தியிலும் பிரசித்தமாக அறியப்படும் போர்ட் பிளேர் நகரத்தில் சில இடங்கள் இந்தியர் அல்லாதவருக்காகவே ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய கேந்திரமாக திகழும் இந்நகரத்தில் இந்திய விமானப்படை, கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
கேளிக்கை அம்சங்கள் நிரம்பிய பல கடற்கரைகளும், ஓய்வுச்சுற்றலா வசதிகளும் இந்நகரத்தில் நிறைந்துள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'காலாபாணி' (கறுப்பு நீர்) சிறைச்சாலை இந்நகரில்தான் அமைந்துள்ளது. இது 1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் இது காலனிய இந்தியாவில் பரவலாக அறியப்பட்டிருந்தது.
1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த காலாபாணி எனப்படும் 'செல்லுலர்' சிறைச்சாலையானது அக்காலத்தில் இந்திய அரசியல் கைதிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வதைக்கூடமாக பயன்படுத்தப்பட்டதாகும்.
மிகக்கொடுமையான அநீதிகளும் கொடுமைகளும் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுநிகழ்வின் மௌனசாட்சியாக இச்சிறைச்சாலை இன்றும் வீற்றிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு 'காலாபாணி' என்றும் 'சிறைச்சாலை' என்றும் வெளியான திரைப்படம் இந்த நிஜ வளாகத்தில் நிஜமான சரித்திர சம்பவங்களோடு எடுக்கப்பட்டது என்பதும குறிப்பிடத்தக்கது.
இந்த செல்லுலர் சிறைக்கு அருகிலேயே ஒரு நீர் விளையாட்டு வளாகமும் அமைந்துள்ளது. இங்கு படகுப்பாராச்சூட் பறப்பு, வாட்டர் ஸ்கூட்டர், துடுப்புப்படகு, மிதவைப்படகு போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.
வணிக நோக்குடன் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கப்பட்டாலும் அந்தமான் தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலில் இத்தகைய சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது விசேஷமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. போர் பிளேர் நகரின் இதமான பருவநிலை இது போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பொருத்தமாக இருப்பது ஒரு  கூடுதல் சிறப்பம்சம்.
போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாகவே உள்ளது. சென்னை, கல்கத்தா மற்றும் புவனேஸ்வர் நகரங்களிலிருந்து போர்ட் பிளேர் வீர சாவர்க்கர் விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. இது தவிர இந்திய கப்பல் துறை நிறுவனம் பலவிதமான சொகுசு பயணக்கப்பல்களையும் போர்ட் பிளேர் நகருக்கு இயக்குகிறது.

ராஸ் தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள்

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன.
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு - வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்கள்
வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த இடிபாடுகள் காணப்படும் இந்த தீவுப்பகுதி பல வருடங்களாகவே முக்கியமான சுற்றுலாத்தலமாக பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆங்கிலேயே ஆக்கிரமிப்பு காலம் தொடங்கி சுதந்திரபோராட்டக்காலம் வரையிலான பல்வேறு நிகவுகளோடு தொடர்புடைய வரலாற்றுக் கட்டிடங்கள் இந்த ராஸ் தீவில் அமைந்துள்ளன.
போர்ட் பிளேரிலிருந்து ராஸ் தீவிலுள்ள பீனிக்ஸ் ஜெட்டி துறைமுகத்திற்கு படகு வசதிகள் கிடைக்கின்றன. முழுக்க முழுக்க இந்திய கப்பற்கடையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ராஸ் தீவிற்கு வருகை தரும் பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
வரலாற்றுப்பிரியர்களால் இந்த ராஸ் தீவு முக்கியமான இடமாக கருதப்படுவதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது, 1857ம் ஆண்டில் முதல் சுதந்திர போராட்டம் வெடித்தபின்னர் ஆங்கிலேயெ அரசாங்கம் இந்த தீவுப்பகுதியை அதிதீவிர சிறை வளாகமாக மாற்றி இங்கு முக்கியமான அரசியல் கைதிகளை அடைத்துவைக்க திட்டமிட்டது.
இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏறக்குறை 80 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக, இந்த தீவுக்குள்ளேயே குடியிருப்புப்பகுதிகள், மருத்துவமனை வசதிகள், உணவுக்கூடங்கள், கடைத்தெரு, விளையாட்டு மையங்கள் போன்றவை இத்தீவில் அமைக்கப்பட்டிருந்தன.
இப்படி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் யாவும் இன்று சிதிலங்களாக காட்சியளிப்பதுதான் இந்த ராஸ் தீவின் பிரதான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த தீவுப்பகுதி ஜப்பானின் தாக்குதலில் சிக்கிக்கொண்டதே இங்குள்ள கட்டமைப்புகள் சேதமடைந்ததற்கு காரணமாகும்.   ராஸ் தீவை ஒட்டியே அமைந்துள்ள ஸ்மித் தீவும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.

தெரஸா தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள்

தனிமையான தீவாக காட்சியளிக்கும் இந்த தெரஸா தீவு ஏராளமான சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளது. பொதுவாக மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இது வெகுவாக கவர்கிறது.
தெரஸா தீவுக்கு சென்றடைய பயணிகளுக்கு சற்றே சிரமமாக இருக்கலாம். போர்ட் பிளேரிலிருந்து வாடகை ஹெலிகாப்டர் மூலம் ஒன்றரை மணி நேர பயணத்தில் தெரஸா தீவுக்கு செல்லலாம். வேறொரு மார்க்கமாக நான்கௌரி தீவு வழியாகவும் இரண்டரை மணி நேரத்தில் செல்லலாம். 
தெரஸா தீவானது மரம் மற்றும் களி மண்ணால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. குறைவான விலையில்  அதே சமயம் கலையம்சத்துடன் காட்சியளிக்கும் இந்த அழகுப்பொருட்கள் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் ரசனையுடன் விரும்பி வாங்கப்படுகின்றன.
பொதுவாக மரத்தில் குடையப்பட்ட சிறு படகுகள் மற்றும் மண் பானைகள் இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்களில் குறிப்பிடத்தக்கவையாகும். இவை யாவுமே சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிசைத்தொழில் கூடங்களில் கைவினைக்கலைஞர்களால் பெரும்பாலும் கைகளாலேயே உருவாக்கப்படுகின்றன.
2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்டபோதிலும் 2043 குடி மக்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க ஒரு சிறிய எண்ணிக்கையாக வசிக்கும் தெரஸா தீவு சமூகத்தினர் தங்கள் கலைப்பொருட்களுக்கென ஒரு வியாபார அடையாளத்தை உருவாக்கிக்கொண்டுள்ளனர். 
இங்கு கிடைக்கும் கலைப்பொருட்களை பார்த்து ரசிப்பதும் உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தை கவனிப்பதும் பயணிகளை நிச்சயம் கவரும் அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த சுனாமி தாக்குதலில் இந்த தீவுப்பகுதியே இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் காட்சியும் பயணிகள் காண வேண்டிய ஒன்றாகும். நிலப்பகுதிகளையே மாற்றி அமைக்கும் அளவுக்கு வல்லமை படைத்த சுனாமியின் சீற்றத்தை நாம் இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஜாலி பாய், அந்தமான் நிகோபார் தீவுகள்

ஜாலி பாய் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவு போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே உள்ளது. 'மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' அல்லது 'வாண்டூர் நேஷனல் பார்க்' எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ள இந்த தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம்.
அது மட்டுமல்லாமல் வைரம் போல் ஜொலிக்கும் தூய மணற்பரப்பு மற்றும் மரகதப்பச்சை ஸ்படிக நீர்ப்பரப்பு போன்றவற்றை இந்த தீவின் கடற்கரைகள் கொண்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் டால்பின்களையும் இந்த தீவுப்பகுதியில் தரிசிக்க வாய்ப்புண்டு.
அந்தமான நிக்கோபார் தீவுகளின் இருப்பிட உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சியாக 'மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' திட்டம் இந்திய வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
150 தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த கடல்சார் தேசியப்பூங்கா சுமார் 280 ச.கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இந்த தீவுகளில் ஜாலி பாய் தீவு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த ஜாலி பாய் தீவை நோக்கி பயணிக்கும் அனுபவமே உங்களை மெய்மறக்க வைத்துவிடும் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு சுவாரசிய உண்மையாகும். வனத்துறையிடமிருந்து நுழைவு அனுமதியை பெறவும் ஃபெர்ரி கட்டணமாகவும் முறையே ரூ 50 மற்றும் ரூ500 கட்டணத்தை போர்ட் பிளேர் துறைமுகத்திலேயே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் கண்களால் பருகப்போகும் இயற்கை விருந்துக்கு இந்த கட்டணம் மிக மிக குறைவு என்பதை பயணத்தின்போது புரிந்துகொள்வீர்கள். பல அழகிய தீவுகளின் வழியாகவும், நீலப்பச்சை நீர்ப்பரப்பின் ஊடே நீளும் இந்த ஃபெர்ரி பயணத்தில் கூடவே வரும் வழிகாட்டிகள் ஆங்காங்கு காணப்படும் எழில் அம்சங்கள், தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டி விளக்குகின்றனர்.
ஜாலி பாய் தீவில் சொகுசுப்படகுக்கான துறைமுகம் இல்லாததால் தீவுக்கு அருகாமையில் பயணிகள் வேறு சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு தீவில் இறக்கிவிடப்படுகின்றனர்.
இந்த சிறு படகுகளின் அடிப்பாக ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் நன்றாக ரசிக்கலாம். ஆழம் குறைவான இந்த கடற்கரைப்பகுதியில்தான் இந்த இரண்டு அம்சங்களும் பளிச்சென்று காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல் சொர்க்கம் போன்ற கடல் காட்சிகளை வேறு எங்குமே இந்திய நிலப்பரப்பின் ஓரம் பார்த்திருக்க முடியாது என்பதால் இந்த படகுப்பயணத்தின் ஒவ்வொரு கணமும் பயணிகளின் மனதில் சிலிர்ப்பூட்டும் பதிவுகளாக பதியப்படும் என்பது நிச்சயம்.
மேலும், இந்த ஜாலி பாய் தீவுப்பகுதியில் சில நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றவும் வேண்டியுள்ளது. இங்கு பயணிகள் தங்களது உணவையோ நீரையோ எடுத்துவர முடியாது. போர்ட் பிளேரில் படகில் ஏறும்போது அவர்களுக்கு வனத்துறையால் வழங்கப்படும் உணவை மட்டுமே இங்கு எடுத்து வர முடியும்.
தீவின் கன்னித்தன்மை கெடாது பாதுகாக்க மேற்கொள்ள எடுக்கப்படும் இந்த முயற்சிகளை பயணிகளை நன்றாக புரிந்துகொள்ள முடியும். அப்பழுக்கற்ற கடற்கரைகளும், தேவர்களுக்காக உருவாக்கப்பட்டது போன்ற குடில்களும் ஈடன் தோட்டம் போன்ற சூழலும் பயணிகளை கரைந்துருக செய்துவிடும் வல்லமை படைத்தவை.
இப்படிப்பட்ட எழில் பூமியில்தான் மனித இனம் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதா என்று மருகிப்போக வைக்கும் மயக்கு சக்தி இங்கே நிரம்பி வழிகிறது. தேனிலவுப்பயணம் வந்திருப்போர் ஒரு மதிய நேரத்தை இந்த தீவில் கழிப்பது அவர்கள் வாழ்வில் நீங்காத நினைவாய் இடம் பெறும்.

இந்திரா பாயிண்ட், அந்தமான் நிகோபார் தீவுகள்

இந்திரா பாயிண்ட் என்பது நிகோபார் தீவின் தென்கோடி முனையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்கோடி முனை என்பதால் இந்த இடம் இந்திய சுற்றுலா பயணிகளால் சுவாரசியமான இடமாகவும் கருதப்படுகிறது.
மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவாக இந்த இடத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. 1972ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கலங்கரை விளக்கங்களில் ஒன்றாக இங்கு அமைந்திருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தை  பார்த்து ரசிக்கவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
எல்லா  கலங்கரை விளக்கங்களையும் போன்றே சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ள இது பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் உச்சியில் ஒரு 'ஹெலிபேட்' (ஹெலிகாப்டர் தளம்) அமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷ அம்சமாகும்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது இந்த கலங்கரை விளக்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்துடன் சரி செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் பின்னாளில் புனரமைப்பு செய்யப்பட்டு எப்போதும் போலவே 'மலேசியா-மலாக்கா-இந்தியா' பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு திசைக்காட்டியாக செயல்பட்டுவருகிறது.
16 கடல் மைல் தொலைவுக்கு வெளிச்சம் தெரியக்கூடிய சக்தியை கொண்டுள்ள இது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் ஒரே ஒரு கலங்கரை விளக்கமாகவும் அறியப்படுகிறது.
இதன் உச்சியிலிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அழகை பருகும் அனுபவத்தை எடுத்துச்சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு நீலப்பச்சை நீரால் சூழப்பட்டு வெண்மணற்பரப்புடன் பளீரிடும் தீவுகள் நம்மை பிரமிப்பில் திகைக்கச்செய்து இயற்கையின் படைப்பு குறித்த விழிப்புணர்ச்சியை நம்முள் புதிதாய் ஏற்படுத்துகின்றன.

அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு - யானை சவாரி 

அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு - யானை சவாரி


அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ஹேவ்லாக் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - அறிவியல் பூங்கா 
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - அறிவியல் பூங்கா

அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - செல்லுலர் ஜெயில் 
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - செல்லுலர் ஜெயில்

அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - அறிவியல் மையம் 
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - அறிவியல் மையம்

அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - சத்தாம் தீவு 
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - சத்தாம் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - கண்டா கர் அல்லது மணிக்கூண்டு 
அந்தமான் நிகோபார் தீவுகள் - போர்ட் பிளேர் - கண்டா கர் அல்லது மணிக்கூண்டு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு
அந்தமான் நிகோபார் தீவுகள் - ராஸ் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு - சுனாமியின் கோரத்தாக்குதலுக்கு பிறகு 
அந்தமான் நிகோபார் தீவுகள் - வைப்பர் தீவு - சுனாமியின் கோரத்தாக்குதலுக்கு பிறகு

உண்மைகள்
மாநிலம்:அந்தமான் நிகோபார் தீவுகள்
பிரபலம்:கடற்கரைகள், சாகசப் பயணம், கோட்டைகள்
மொழி : ஹிந்தி, ஆங்கிலம், தமிழ்
சிறந்த சீசன்:அக்டோபர்-மே
எஸ்டிடி கோடு:03193
பின்கோடு: 744301

அந்தமான் நிகோபார் தீவுகள் வானிலை

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளை போன்றே அவ்வளவாக வானிலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதில்லை. இந்த அற்புத தீவுக் கூட்டத்தை அக்டோபர் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப்பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. ஏனெனில் இந்தக் காலங்களில் சுற்றுலாத் திருவிழா நடைபெறுவதோடு, மழையின் கிருபையால் கடல் நீர் சுத்தமாகவும், பார்பதற்கு மிகவும் அழகானதாகவும் காணப்படும். மேலும் இந்தக் காலங்களில் வெப்பநிலை 24 முதல் 32 டிகிரி வரை பதிவாகும்.
கோடை
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 36 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் சூடான வெப்பநிலை நிலவுவதுடன், ஈரப்பதமும் அதிகமாக காணப்படுவதால் பயணிகள் அந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு கோடை காலங்களில் சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.
மழைக்காலம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மழைக் காலங்களில் 3000 மில்லிமீட்டர் அளவில் மழை பதிவாவதுடன், 24 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும்.
குளிர்காலம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 24 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.


Thanks